Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 8 February 2014

உணவை அழிப்போர், உயிரை அழிப்போர்

எல்லா உயிரினங்களும் உணவு தேடலை முதன்மைச் செயலாக மேற்கொண்டுள்ளன. இதற்காகவே, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழிக்கின்றன. எறும்பும் தேனீயும் மட்டும் உணவு சேமிக்கும் உன்னத முறையை இயல்பாகப் பெற்றுள்ளன. மனிதன் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தான். வகை வகையாகச் சுவை உணவைப் படைத்தான். அறுவகைச் சுவைகளிலும் உணவை உருவாக்கினான்.
உணவுப் பொருள்களை வழங்கும் உழவன் கடுமையாக உழைக்கிறான். விடியலில் எழுகிறான். வயலில் உழுகிறான். மாட்டுடன் மாடாக உழைத்துப் பாடுபடுகிறான். முன்பு பண்ட மாற்று முறை இருந்தது. அப்போது உழைப்புக்கு மதிப்பு இருந்தது. நெல் விளைவித்தவனைப் பருப்பு விளைவித்தவன் மதிக்கும் நிலை இருந்தது. பண்ட மாற்று முறையை பின்னர் வந்த பணம் மாற்றியது; பணம் தந்து, தான் எந்த உணவுப் பொருளையும் எளிதாக வாங்க முடியும் என்ற நிலை பிறந்தது. உழைப்பின் உயர்ந்த மதிப்பு தாழ்ந்தது. உணவுப் பொருளை வீணாக்கும் மன உணர்வும் பிறந்தது.
உயிரை வாழ வைக்கும் உயர்ந்த உணவுப் பொருளில் மூன்றில் ஒரு பங்கு வீணாகி அழிந்து போகிறது. இது அதிர்ச்சி தரும் செய்தி. நாள்தோறும் 870 மில்லியன் (80 கோடி) மக்கள் பட்டினியால் வேதனைப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின், உணவு பிரிவு அறிவித்துள்ளது. இப்படி வீணாகும் உணவுப் பொருளின் மதிப்பு 750 பிலியன் டாலர். இஃது ஓர் ஆண்டின் புள்ளிவிவரம்.
ஆண்டுதோறும் இந்தியா 250 மில்லியன் டன் அளவுக்கு உணவு தானியம் உற்பத்தி செய்கிறது. இது பாராட்டுக்குரிய தகவல். ஆனால் 250 மில்லியன் மக்கள் இரவு வேளை உணவில்லாமல் பட்டினியோடு படுக்கிறார்கள். உற்பத்தியாகும் உணவு தானியங்களில் ஏறத்தாழ 40 விழுக்காடு வீணாகி விடுகிறது. இப்படி வீணாகி விடும் உணவு தானியங்களின் மதிப்பு 58,000 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல நிலைகளிலும் நாசமாகும் கோதுமையின் அளவு, ஆஸ்திரேலிய கண்டத்தின் ஓராண்டுக்கு கோதுமையின் உற்பத்தி அளவுக்குச் சமம் என்று சொல்லப்படுகிறது.
உணவுத் தானியங்களின் உற்பத்தி நிலையிலேயே அழிவு நேர்கிறது. அறுவடைக்குப் பிறகும், சேமிப்பு நிலையிலும், உணவுப் பொருள் நுகரும் நிலையிலும் தானியங்கள் வீணாக்கப்படுகின்றன. அரிசி வீணாகும் நிலையும் கவனிக்கத்தக்கது. காய்கறிகள் அழுகி வீணாகிவிடுவதும் குறிப்பிடத்தக்கது. பழங்கள் பாழாகி விடுவதும் எண்ணத்தக்கது.
உணவுப் பொருளை வீணாக்கும் நிலைமை கொண்ட நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. வயல் முதற்கொண்டு விழா விருந்துக்கூடம் வரை, உணவுப் பொருளை வீணடிக்கும் விவேகமில்லா செயல்முறை இங்கு நடைபெறுகிறது. வயலில் விளையும் முற்றிய கதிர் நெல்லை, வரப்பு எலி உண்டு கொழுக்கிறது. முன்பு வயல் எலிகளைப் பாம்புகள் விழுங்கி, எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தன. பாம்புத் தோலைப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் காரணமாகப் பாம்புகள் கொல்லப்பட்டன. எலிகள் பல்கிப் பெருகின. தானிய மூட்டையைத் தூக்கும்போது கொக்கிப் போட்டு உயர்த்துவதால் அதன் சிறு ஓட்டை வழியாகவும் தானிய மணிகள் சிந்துகின்றன. சேமிப்புக் கிடங்குகளில் சரியான பராமரிப்பு இல்லாமையால், உணவுத் தானியங்கள் மக்கிப் பாழாகின்றன. அது மட்டுமல்ல சேமிப்பு கிடங்கின் பகுதிகள், பெருச்சாளிகளின் விருந்து மேடையாகவும் அமைந்து விடுகின்றன. சேமிப்புக் கிடங்கிலுள்ள உணவுப் பொருள் - தானியம் - தனக்குச் சொந்தம் அல்ல; அது யாரோ சிலரைச் சென்றடையப் போகிறது என்ற எண்ணம், உரிய அலுவலர்கள் கவனமாகப் பாதுகாப்பு வழங்காதபடியும் திசை திருப்பி விடுகிறது.
உண்ணும்போது சோற்றுப் பருக்கை சிந்தும். இதுபற்றி யாரும் சிந்திப்பதில்லை. ஒரு சோற்றுப் பருக்கை உருவாவதற்குக் குறைந்தது 3 மாதங்களாவது தேவைப்படும் என்ற எண்ணம் எவருக்கும் தோன்றுவதில்லை. இப்படி வீணாக்கப்படும் உணவு, குப்பைக் கூடையை அடைகிறது. வீட்டை விட்டு வெளியில் செல்லும் குடும்பத்தினர், எதிர்பாராத நிலையில் உணவகத்தில் சாப்பிடும் நிலைமை ஏற்படும். அப்போது கெட்டுப் போன வீட்டுணவு குப்பை மேட்டை அடையும். இவற்றையெல்லாம் விட திருமண விருந்தின்போது வாழை இலையில் வைக்கப்படும் நல்லுணவு வீணாவது - வீணாக்கப்படுவது பற்றி எவரும் கவலைப்படுவதில்லை! உண்பவரும், வயிற்றுணவை வீணாக்குகிறோமே என்று எண்ணுவதில்லை. மேஜை விரிப்போடு வாழை இலையைச் சுருட்டி வெளியில் கொட்டுபவரும் வருந்துவதில்லை. இந்த உணவு கிடைக்காமல் எவ்வளவு ஆயிரம் பேர் பட்டினி கிடக்கிறார்களே என்று எவரும் கிஞ்சித்தும் நினைத்துப் பார்ப்பதில்லை.
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவருக்கு மானியத் திட்டத்தின் கீழ் உணவுத் தானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனாலும், அனைவருக்கும் முழு அளவில் உணவு கிடைப்பதில்லை.
""தனி ஒருவனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்'' என்றார் பாரதியார்.
தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காத நிலையை உருவாக்குபவரைத் தண்டிக்க வேண்டும் என்ற தொடரையும் தற்போது சேர்க்கலாம்.

No comments: