Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 4 February 2014

சென்னைப் பல்கலை. நேர்முகத் தேர்வு:முதன்முறையாக விடியோ பதிவு

பேராசிரியர் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக அண்மையில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
  சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளின் கீழ் 80-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்துவந்தன.
 யுஜிசி-யின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடாததால், இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக பல்கலைக்கழகத்தின் முந்தைய துணைவேந்தர்கள் கூறினர்.
 இந்த நிலையில், இப்போதும் பணியாளர் தேர்வு, கல்வித் தகுதி தொடர்பான அரசாணை வெளி வராத நிலையில், 'நாக்' அங்கீகாரம் பெறுவது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை சென்னை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
முதல் கட்டமாக, உயிரி இயற்பியல், விலங்கியல், மேலாண்மைக் கல்வி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி 31-ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.  இந்த நேர்முகத் தேர்வு முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காகவே இதுபோன்று நேர்முகத் தேர்வு விடியோ பதிவு செய்யப்படுவதாக பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த புதிய நடைமுறைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
பேராசிரியர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதாவது கல்வி செயல்பாட்டுக் குறியீடு (ஏபிஐ) முறையில் தேர்வர்களின் தகுதிகளுக்கு தனித்தனி மதிப்பெண்களை நிர்ணயித்து, அதன்அடிப்படையில் தரநிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இதுபோல், அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர் தேர்வை நடத்தி வரும் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு என ஒவ்வொரு நிலையாக தேர்வர்களின் தகுதி மதிப்பெண்களை வெளியிட்டு அதைச் சரிபார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் அளித்து வருகிறது.
ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் இதுபோன்ற நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறோம் என்ற பெயரில் நேர்முகத் தேர்வு முழுவதையும் விடியோ பதிவு செய்து வருகிறது.
இதுபோன்ற விடியோ பதிவு, பொதுவாக அனைத்து தேர்வர்களுக்கும் பயத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆங்கிலப் புலமை இல்லாத தேர்வர்களுக்கு இந்த புதிய நடைமுறையால் கூச்ச உணர்வு ஏற்பட்டு, நேர்முகத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும்.
எனவே, இதுபோன்ற விடியோ பதிவு முறையை ரத்து செய்து, நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்றனர்.