Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 22 February 2014

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்புக் கையேடு: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேட்டை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசுப் பள்ளிகளில் 6,917 ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.
அந்தப் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்காக ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களும், மாணவர்களும் இதைப் படிக்கும்போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ளும் முறையில் வழிகாட்டி கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 1,600 பள்ளிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கையேடு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வழிகாட்டி கையேட்டை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக்கொண்டார்.
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்காக ரூ.1.80 கோடி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தந்தை, தாய் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமலிருக்க, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்புச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகையில் நிரந்தர வைப்புத் தொகை நிதியாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்.
2011-12, 2012-13 ஆம் கல்வியாண்டுகளில் 720 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டில் 360 மாணவ, மாணவியருக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகைக்கான பத்திரத்தை வழங்கினார்.
செஸ் விளையாட்டு: மாணவ, மாணவியரின் சிந்திக்கும் திறமையையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்காக 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரத்து 628 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் பல்வேறு பிரிவுகளில் 24 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1,200-ம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.800-ம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.400-ம் என மொத்தம் ரூ.19 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக ஒரு மாணவிக்கு ரூ.1,200 பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
மாவட்ட நூலகங்களை சிறப்பான முறையில் மேற்பார்வையிடுவதற்காக மாவட்ட நூலக அலுவலர்களுக்கு ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் லேப்-டாப் வழங்கப்படுகிறது. இவர்களில் ஒருவருக்கு லேப்-டாப்பை முதல்வர் வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments: