ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ப்ரியவதனா உள்ளிட்ட 3 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணான 90 முதல் 104 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் ஒரு படிநிலையிலும், 105 முதல் 119 மதிப்பெண் எடுத்தவர்கள் ஒரு படிநிலையிலும் என புதிதாக 4 படிநிலைகளை உருவாக்கி, இதற்காக 2012-ம் ஆண்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும், 104 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும் ஒரே படிநிலையாகக் கருதுவது தவறு என்றும், எனவே, இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் வரும் 28-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணுடன், 12 ம் வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்ட மதிப்பெண் பட்டியலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment