Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 12 February 2014

TRB-TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து  இத்தேர்வில் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், இந்த 45 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்று முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 16,932 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை அண்மையில் அரசு அறிவித்தது. இதனால், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 ஆகக் குறைந்தது.
மதிப்பெண் சலுகை காரணமாக, இரு தாள்களிலும் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மொத்தம் 6.6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் சலுகை காரணமாக சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 சதவீத மதிப்பெண் சலுகை: சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினர் ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் என்பதற்குப் பதிலாக, 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதலாக 45 ஆயிரம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments: