வரும் கல்வியாண்டுக்கான (2014- 2015) பொறியியல் கலந்தாய்வுக்கு 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டைப் போலவே கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் ராஜாராம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெற்ற பி.இ. கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
உயர் கல்வித் துறை செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா, தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
2014-15 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்பாக கலந்தாய்வு முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு விடும்.
கலந்தாய்வை எவ்வளவு நாள்கள் நடத்துவது, எப்போது தொடங்குவது என்பன உள்ளிட்ட முடிவுகள் ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
பள்ளி கல்வித் துறை, மருத்துவ கல்வி இயக்குநரகம் மற்றும் தேர்தல் ஆணையரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே கலந்தாய்வை எத்தனை நாள்கள் நடத்துவது, எப்போது தொடங்குவது என்பது இறுதி செய்யப்படும் என்றார் அவர்.
கடந்த ஆண்டு நிலவரம்: பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 2013-14 கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வு முன்கூட்டியே நடத்தப்பட்டது.
ஏப்ரல் மாதம் முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு ஜூன் 17-ம் தேதியே கலந்தாய்வு தொடங்கப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடங்கி ஜூலை 26-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
அதன் பிறகு, பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டில் காலியாக இருந்த இடங்களுக்கு என தொடர்ந்து நடத்தப்பட்டு ஜுலை 29-ம் தேதி பி.இ. கலந்தாய்வு நிறைவு செய்யப்பட்டது.
அப்போது மொத்தமிருந்த 2,07,141 பொறியியல் இடங்களில் 1,27,838 இடங்கள் நிரம்பி, 79,303 இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment