சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் பிப்ரவரி 22 முதல் 40 நாள்கள் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் வியாழக்கிழமை (பிப்.20) வரை தங்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்காக 40 நாள்கள் பயிற்சி வழங்க அரசாணையும் வெளியிடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகு, அந்தப் பதிவுகளின் அடிப்படையில் மையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். பாடத்திட்டத்துக்கு ஏற்ப இந்தப் பயிற்சிக்கான பாடங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள் தயாரித்துக்கொள்ள வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலவச தேநீர், உணவு: பயிற்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தேநீர், உணவு, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வரை தமிழ், ஆங்கிலம், கல்வி உளவியல், சமூக அறிவியல் உள்ளிட்டப் பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சுமார் 2,500 பேர் வரை பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் என்பதால் இவர்களுக்கான உணவு, பயிற்சி ஆகியவற்றை பயிற்சி மையத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment