பல்கலைக்கழகங்களின் 16 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ.573.59 கோடியில் புதிய கட்டடங்கள் கட்ட தமிழக முதல்வர் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.
மதுரை காமராஜர், திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார், சென்னை, பெரியார், பாரதிதாசன் மற்றும் அழகப்பா ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16 உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ.153.70 கோடி மதிப்பிலான கட்டடங்களுக்கும், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரிகள், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், காஞ்சிபுரம், கோவை, மதுரை மற்றும் அரியலூர் ஆகிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு ரூ.272.81 கோடியிலான கட்டடங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
14 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ரூ.129.52 கோடியில் மாணவ-மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடியில் பன்னாட்டு மையம், மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் பல்வேறு துறைகளுக்கு ரூ.14.56 கோடி மதிப்பிலான கட்டடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
கட்டடங்கள் திறப்பு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான மத்திய கருவி மைய கட்டடம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்கள், திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி, வடசென்னையில் உள்ள பாரதி பெண்கள் கலைக் கல்லூரி, சென்னை ராணி மேரி கல்லூரி ஆகியவற்றில் ரூ.1.35 கோடியில் மூன்று நூலகக் கட்டடங்கள், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ரூ.1.22 கோடியில் கட்டப்பட்டுள்ள நூலகம், விடுதிக் கட்டடங்கள், அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடியில் ஆராய்ச்சி ஆய்வகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.3.39 கோடியில் கருத்தரங்குக் கூடம், சேலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு ரூ.4.51 கோடியில் துறைக் கட்டடங்கள், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.4 கோடியில் சமூக அறிவியல் கூடம் மற்றும் வகுப்பறை கட்டடங்கள் என ரூ.31.46 கோடியில் புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment