குரூப் 2 தொகுதியில் நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கு கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்பட குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது. அதில், நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் 10- ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள், பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அரசுப் பணியாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.