ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு புதன்கிழமை (ஜனவரி 29) மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜனவரி 20 முதல் 27-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 30 மையங்களில் நடைபெற்றது.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாதவர்கள், அவர்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மையங்களில் ஜனவரி 29-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். அதே போல், 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் மறுதேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்களும் இதில் பங்கேற்கலாம்.
இந்தத் தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்துக்கு உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும். இனி எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment