Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 29 January 2014

தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா?

முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டுகள் வந்து குவிந்தாலும், என் கல்வி சார்ந்த சுற்றத்தில் என் எழுத்துகள் அதிகம் படிக்கப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு.
“தமிழ் படிச்சு என்ன ஆகப் போகிறது? வேலை கூட கிடைக்காது” என்று பலர் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். ஆங்கில வழிக் கல்விதான் வேலைக்கு உத்தரவாதம், ஆங்கில அறிவுதான் மெத்த அறிவு, உள்ளூர் மொழி வாழ்க்கைக்கு உதவாது என்கிற எண்ணங்கள் வலுப்பெற்று வருகின்றன. கடன் வாங்கி பெரிய பள்ளியில் சேர்க்கும் எளியவர்கள் குழந்தை ஆங்கிலம் பேச ஆரம்பித்தவுடன் கொடுத்த காசுக்கு பலன் கிட்டியதாக மகிழ்கிறார்கள். ஆங்கிலம் தெரியாவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்று தீர்மானமாக நம்புகிறார்கள்.
இது உண்மையா?
ஆங்கிலம் இன்று உலகின் பிரதான வியாபார மொழி. அதன் அறிவும் தேர்ச்சியும் உங்களை தொழில் உலகில் பிழைக்க பயன்படும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், ஆங்கிலம் தெரிந்தால்தான் எந்த வேலையும் செய்யமுடியும் என்பது பொய். மொழி அறிவு எல்லா வேலைகளுக்கும் சமமாக தேவைப்படுவதில்லை. மென்பொருள் எழுதுவதற்கும், வாகனம் தயாரிப்பிற்கும், ஓட்டுனருக்கும் தேவைப்படும் மொழி அறிவை விட ஆசிரியருக்கு, விற்பனை சிப்பந்திக்கு, மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, மொழி பெயர்ப்பாளருக்கு அதிகம் தேவைப்படும். இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.
சுருக்கமாகச் சொன்னால் மனிதர்களுடன் கலந்துரையாடும் வேலைகளுக்கு மொழி அறிவு அதிகம் தேவை. இயந்திரங்களுடன் பணிபுரிவருக்கு அதன் தேவை குறைவு. இந்த விகிதாச்சார அடிப்படையின்படி 80% வேலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் வேலை செய்யும் அறிவு இருந்தாலே போதும். 20%க்கும் குறைவான வேலைகளுக்குத்தான் மொழித்திறன் அதிகம் தேவைப்படுகிறது.
இதனால்தான் சீனர்கள், ஜப்பானியர்கள். கொரியர்கள், ஜெர்மானியர்கள், ரஷ்யர்கள் எல்லாரும் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் எந்த சிக்கலும் இல்லாமல் முன்னேறியிருக்கிறார்கள். இந்த ஆதார பலத்திற்கு காரணம் தாய் மொழிக் கல்வி! அத்தனை மொழியியல் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகளும் இதைத் திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன. சிந்தனை மொழி, பேசும் மொழி, கற்கும் மொழி, வேலை செய்யும் மொழி அனைத்தும் ஒன்றாக இருக்கும் பொழுது அது இயல்பான இசைவுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால்தான் இவர்களின் செயல்பாடுகளில் ஒரு தன்னம்பிக்கையும் தெளிவும் உள்ளதைப் பார்க்கலாம்.
அமெரிக்கா உருவாக்க நினைக்கும் ஒரு பன்னாட்டு தட்டை கலாச்சாரத்திற்கு ஆங்கிலம் ஒரு முக்கிய கருவி. நாடுகளை பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தவும் அதன் மொழி கலாச்சாரக் கூறுகளை மட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தவும் ஆங்கிலம் அவசியமாகிறது. இதனால்தான் கன்னியாகுமரியில் தமிழனாய் பிறந்து பெரும்புதூரில் ஜெர்மானியக் கம்பெனியில் பணிபுரியும் போதும் ஆங்கிலம் அவசியம் என ஆந்திராவை சேர்ந்த மேலாளர் வலியுறுத்துகிறார்.
மெக்காலேவின் திட்டம் பரிபூரண வெற்றி என்று சொல்லலாம். அரசே தாய் மொழி தேவையில்லை, ஆங்கிலம் படியுங்கள் என்று சொல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
சுத்தமாக இந்தியில் மட்டுமே பேசி, ஆங்கிலத்தைக்கூட இந்தியில் படிக்கும் வட இந்திய இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆங்கில வழியில் படிப்பதாகக் கூறும் தமிழ் நாட்டு பொறியியல் மாணவர்களுக்கு தான் வேலைத்திறன் குறைவு. 75% மாணவர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஏன்?
புரியாமல் படிக்கும் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கடினம். செயல்முறைப் படுத்த முடியாத கல்வி தொழிற்சாலைக்கு தேவையில்லை. ஆங்கிலம் தெரியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை மென்திறன்கள் கற்பதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்களும் இந்த உளவியல் சிக்கலை அவிழ்க்க முடியாமல் திணறுகிறார்கள். இது தான் நிதர்சனம்.
பெரிய ஐ.டி. கம்பெனிகள் அள்ளிக்கொண்டு போகும் சில ஆயிரக்கணக்கான மாணவர்களை மட்டும் பார்த்து ஏமாறுகிறார்கள் பெற்றோர்கள்.
அடுத்த 5 ஆண்டுகளில் வரும் தொழில் நுட்பம் பற்றிக் கூறுகையில் ஐ.டி துறைத் தலைவர் ஒருவர் கூறினார்: “ அடுத்த 5 ஆண்டுகளில் என்ன புதிதாக வரும் என்று சொல்ல முடியாது. அந்த புதிய வேலைகள் 60% வரை இருக்கும். அதனால் தற்போதைய திறன்கள் கற்பதை விட முக்கியம் தன்னம்பிக்கையும் மாற்றத்தை எதிர்நோக்கும் மனோபாவமும்.”
கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் இருப்பதை வளர்ப்பதைக் காட்டிலும் இல்லாததைக் காட்டி பயமுறுத்துகின்றன. தமிழ் வழிக் கல்வி படித்து, தன்னம்பிக்கையுடன் பின் பிற மொழிகளையும் திறன்களையும் படித்தல் எதிர்காலத்தின் எல்லா சவால்களை நோக்குவதற்கும் மாணவர்களை பக்குவப்படுத்தும்.
இந்தியாவின் பன்மொழிக் கலாச்சாரம் குறையல்ல. நம் பலம். பிற மொழியாளருடன் தொழில் ரீதியாக பழக இத்தனை ஆண்டுகள் இல்லாத சிரமம் இப்போது எப்படி வந்தது?
கேரள அன்பர்கள் பிற மொழிகள் கற்றும் தாய் மொழி உணர்வுடன் தன் மக்களைக் கண்டால் சம்சாரிக்கிறார்கள். மராத்திய நாடகம் அப்படியே இருக்கிறது. வங்காளி தன் மொழியை கர்வத்துடன் தூக்கிப் பிடிக்கிறான். கன்னடர்கள் ராஜ்யோத்ஸவா தினம் என்று மாநிலம் பிறந்ததைக் கொண்டாடுகிறார்கள்.
தமிழன் எல்லா வேலைகளையும் பிறருக்கு கொடுத்து விட்டு, “தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை” என்று செல்லாக் காசாகி வருகிறான். சென்ற தலைமுறையில் தமிழ் வழி படித்தும் ஆங்கில புலமை, அயல் நாட்டுப் பணி என சிறப்பாக செயல்பட்டவர்கள் நிறைய பேரைச் சொல்லலாம். ஆங்கிலம் படியுங்கள். மாண்டரின் படியுங்கள். அதற்கு முன் உங்கள் தாய் மொழி படியுங்கள்.
எல்லா நேர்காணலிலும் நான் தேர்வுக்கு எனப் பார்ப்பது தன்னம்பிக்கை, எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், சிந்தனை தெளிவு இவைகளையே. இயல்பாக இவை தாய் மொழியில் வளர்பவை. நாம் நசுக்காவிட்டால் இவை தழைக்கும். ஆங்கில பயத்தில் நம் தமிழ் வேர்கள் மீது கல்வி அமைப்புகள் வெந்நீர் ஊற்றுவதை நிறுத்தட்டும்.
மதிப்பெண்கள் நிறைய கிடைக்கும் என ஆசைப்பட்டு தமிழை பத்தாம் வகுப்பிற்கு மேல் தவற விட்டவன் நான். கல்லூரியில் என் தோழன் மூர்த்தி கல்லூரித் தேர்தலில் நிற்க அரியர்ஸ் தடைகளாய் இருந்தன. அவனுக்கு ஆங்கிலம் சிரமம். அதனால் அவனுக்காக அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்து குறிப்புகள் எடுத்து, எளிய ஆங்கிலத்தில் பதில்கள் தயாரித்து அவனை அத்தனை பேப்பர்களிலும் தேற வைத்தேன். என் சிந்தனை தெளிவடைந்ததும், இரு மொழி புலமை வந்ததும், எளிய ஆசிரியப் பயிற்சி முறைகள் கற்றதும் இதனால் தான். நான் முதல் ரேங்க் வாங்க என்றும் மூர்த்தியை காரணமாகச் சொல்வேன். பின் வாசிப்பு மட்டுமே என்னை தமிழுடன் பிணைத்தது.
தேர்தலில் நின்ற மூர்த்தி, பெண்கள் வாக்குகள் இழந்ததால் (நாங்க செஞ்ச அலப்பறை அப்படி) தோற்றது தனிக்கதை!குறைந்தது 2 மொழிகளாவது தேர்ச்சி பெறுதல் இங்கு சாத்தியம். ஒன்றை வைத்து இன்னொன்று கற்கும் சுகம் அலாதியானது! ஒரு ஜோக் உண்டு.
“3 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”
Tri-lingual.
“2 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”
Bi-lingual.
“ ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்களை என்ன சொல்வோம்?”
American.
தமிழனுக்கும் நாளைய சரித்திரத்தில் இப்படி ஒரு அவப்பெயர் வர வாய்ப்புள்ளது.
டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் - தொடர்புக்கு gemba.karthikeyan@gmail.com

No comments: