Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 29 January 2014

அரசாணை இன்றி பணி நியமனத்தை தீவிரப்படுத்தி வரும் பல்கலைக்கழகம்

பணி நியமனத்துக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாத நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் பணி நியமனத்தை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்தப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை யுஜிசி அவ்வப்போது வெளியிடும். இந்த வழிகாட்டுதல்களை உயர் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்.
மாநில பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை, யுஜிசி வழிகாட்டுதல்களை மாநில அரசு அரசாணையாக வெளியிட்ட பிறகே நடைமுறைக்குக் கொண்டு வர முடியும். குறிப்பாக பேராசிரியர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதியம் என்பன உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் யுஜிசி-யின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வெளியிடப்படும் மாநில அரசின் அரசாணையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இந்த நடைமுறையைத்தான் பின்பற்றி வருகின்றன.
இந்த நிலையில், யுஜிசி-யின் பேராசிரியர் நியமனத்துக்கான புதிய நடைமுறைகள் இன்னும் அரசாணையாக வெளியிடப்படாத நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளன.
இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியது:
தமிழக அரசு யுஜிசி வழிகாட்டுதலின் அடிப்படையில் கடந்த 9-9-2009 அன்று அரசாணை 350-யை வெளியிட்டது. அதில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்படும் உதவிப் பேராசிரியர், பேராசிரியர், துணைவேந்தர், கல்லூரி முதல்வர் ஆகியோருக்கான ஊதிய விகிதம் குறித்த உத்தரவு இடம்பெற்றிருந்தது.
மேலும், பணியாளர் நியமனம், கல்வித் தகுதி, தேர்வுக் குழு மற்றும் தேர்வு செய்யும் நடைமுறை ஆகியவற்றுக்கான உத்தரவு தனியாக பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு, பணியாளர் நியமனம் மற்றும் கல்வித் தகுதிக்கான அரசாணை இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை.
அதன் காரணமாகவே, சென்னைப் பல்கலைக்கழகத்தில் 80-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருந்தபோதும், அவை நிரப்பப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தன.
இப்போதும் அரசாணை வெளியாகாத நிலையில், வரும் 31-ம் தேதி உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு சென்னைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இந்த நியமனம் எந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெறுகிறது என்ற வெளிப்படைத் தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது என்றனர்.

No comments: