இந்திய ஆட்சிப் பணிக்கு இணையாக பொறியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை அடைய, ஐ.இ.எஸ்.(Indian engineering service) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இத்தேர்வில், எழுத்துத் தேர்வில் 1,000 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 200 மதிப்பெண்களும் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. மொத்தம் 5 தாள்கள். இத்தேர்வை சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயர்களும் எழுதலாம்.
முதல் தாள் பொது ஆங்கிலம், பொது அறிவு என இரு பகுதிகளைக் கொண்டது. இது 2 மணி நேரம் நடக்கும். பொது அறிவுத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாலானது. இரண்டு மற்றும் மூன்றாம் தாள்கள் விருப்பப் பாடங்கள். இதுவும் 2 மணி நேரம்தான். தலா 200 மதிப்பெண்கள். நான்கு மற்றும் ஐந்தாம்தாளில் கேள்விக்கான பதிலை விரிவாக எழுதவேண்டும். இத்தேர்வு 3 மணிநேரம் கொண்டது. தலா 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஐந்து தாள்களுக்கு மொத்தம் 1,000 மதிப்பெண்கள். கையெழுத்து சரியாக இல்லை எனில் 5 சதவீதம் மதிப்பெண் குறைக்கப்படும்.
இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்திய அரசின் இந்தியன் ரயில்வே சர்வீஸ், இந்தியன் ரயில் ஸ்டோர் சர்வீஸ், சென்ட்ரல் வாட்டர் இன்ஜினீயர் டிபார்ட்மென்ட், சர்வே ஆஃப் இந்தியன் சர்வீஸ் துறைகளில் உயர் பதவிக்கு செல்லலாம். மெக்கானிக்கல் இன்ஜினீயர்கள், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ், இந்தியன் ஆர்டனன்ஸ் ஃபேக்டரி சர்வீஸ், சென்ட்ரல் எலக்ட்ரிக்கல் அண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயர் சர்வீஸ் ஆகிய துறைகளிலும், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்கள், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ், சென்ட்ரல் எலக்ட்ரிக்கல் அண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயர் சர்வீஸ் உள்ளிட்ட துறைகளிலும் பணி புரியலாம்.
பொறியியல் இரண்டாம் ஆண்டின்போதே இத்தேர்வுக்கு தயாராக வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்கள் கிடைக்கும். வரும் ஜூன் 20, 21, 22ம் தேதிகளில் இத்தேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை வழங்கப்படுகிறது. 1,200 மதிப்பெண்களில் தரவரிசை அடிப்படையில் பணியிடம் ஒதுக்கப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு நடக்கும்.
இதில் தேர்ச்சி பெற்றவுடன் அரசின் சகல வசதிகளுடனும், ரூ.40 ஆயிரம் சம்பளத்தை பெற முடியும். பணியிடங்களில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் அரசின் கொள்கை முடிவின்படி, இத்தேர்வுகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு முறை உண்டு என்பதால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் பலன் அடைய வாய்ப்பு அதிகம்.
No comments:
Post a Comment