மதுரை காமராஜர் பல்கலை.யின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின், உதவிப் பேராசிரியர் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்குமாறு
பதிவாளற், தொலைதூரக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஏ.தேவேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அவரது மனு விவரம்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின், சமூகவியல் பாடத்துக்கான உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு 2013 ஜூலை 11 இல் நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றேன்.
நேர்முகத் தேர்வின் முதல் கேள்வியே, பல்கலைக்கழகத்துக்கு எதிராக நீங்கள் தானே வழக்குத் தொடர்ந்துள்ளீர்கள் எனக் கேட்டனர். அதைத்தொடர்ந்து கேட்கப்பட்ட 3 கேள்விகளுக்கும் முறையான பதிலை அளித்துள்ளேன்.
உதவிப் பேராசிரியர் நியமனம் எழுத்துத் தேர்வு மற்றும் கற்பித்தல் திறன் தேர்வுக்கு தலா 25 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 15 மதிப்பெண், கற்பித்தல் அனுபவத்துக்கு 10 மதிப்பெண், ஆய்வுக் கட்டுரைகள் வெளியீட்டுக்கு 15 மதிப்பெண், கருத்தரங்குகளில் பங்கேற்புக்கு 10 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆனால், எழுத்துத் தேர்வோ, கற்பித்தல் திறன் அறியும் தேர்வோ நடத்தப்படவில்லை. நேர்முகத் தேர்வு மட்டுமே நடந்தது. எழுத்துத் தேர்வு மற்றும் கற்பித்தல் திறன் தேர்வுகளில் 50 மதிப்பெண்கள் பெறுவதற்கான தகுதி எனக்கு உள்ளது. மேலும், நேர்முகத் தேர்வையும் நல்ல முறையில் செய்துள்ளேன். பல்வேறு பல்கலைக்கழகங்களின் எம்பிஎல் மாணவர்கள் 15 பேருக்கு, வழிக்காட்டி ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ளது.
ஆகவே, உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். அப்பணியிடங்களில் ஒரு இடத்தை ஒதுக்கி வைத்து, என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநர் ஆகியோர் 8 வாரங்களில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment