Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 4 December 2013

பிளஸ் டூ மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ்-இயற்பியல்

மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல் பாடத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும். எனவே, இந்தப் பாடத்தை திட்டமிட்டுப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறுவது நிச்சயம்.

முழு மதிப்பெண்கள் என்பது எழுதும் மூன்று மணி நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டதல்ல. முதல் இயற்பியல் வகுப்பு முதல் இறுதி நாள் வரை வகுப்பறையில் மாணவன் மேற்கொண்ட விடாமுயற்சி, அயராத உழைப்பு, முழுக் கவனத்துடன் பாடக்குறிப்புகளை முறையாக எடுத்தல், முக்கிய பாடக் கருத்துகளை (Concept) உள்வாங்கி பயன்படுத்த பயிற்சி எடுத்தல் போன்ற இவை அனைத்துமே முழு மதிப்பெண் பெறுவதற்கான முக்கிய பங்களிப்புகள்.

கல்வியாண்டில் எழுதும் ஒவ்வொரு தேர்வையும், நாம் எழுதும் பொதுத்தேர்வு என்ற எண்ணத்துடன் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். சரியாக இந்தத் தேர்வுகளைப் பயன்படுத்தினால் தம்மிடம் உள்ள நிறைகுறைகளை மாணவர்கள் ஆராய்ந்து அடுத்தடுத்த தேர்வில் அவற்றை சரிசெய்ய ஏதுவாக அமையும். இந்த முழுமையான அர்ப்பணிப்பு உள்ள மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற இயலும். இதற்கு அடுத்த படியாக கேள்வித்தாள் தயாரிப்புத் திட்டத்தினை (Blue Print) நன்கு அறிந்திருப்பதன் மூலம் எந்தப் பாடத்தில் எத்தனை மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறிந்து தேர்வுக்குத் தயாராக முடியும்.

தேவையற்ற பதில்களை எழுதி நேரத்தை வீணடிக்காமல்,  சரியான விடையை உரிய காலத்தில் தவறின்றி எழுதினால் முழு மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.
இயற்பியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற எப்படிப் படிக்கவேண்டும் என்பதை நாம் பார்க்கலாம். பகுதி – 1 இல் 30 கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும். சாய்ஸ் எனப்படும் தெரிவு கிடையாது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் 30 மதிப்பெண்கள். முழு மதிப்பெண்கள் பெற சவாலாக அமையும் பகுதி இதுவாகும்.

 நிலைமின்னியல், மின்காந்ததூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும், மின்காந்த அலைகளும் அலை ஒளியியலும், அணு இயற்பியல், அணுக்கரு இயற்பியல் ஆகிய 1, 4, 5, 6, 8 ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலும் தலா 4 வினாக்கள் கேட்கப்படும். 9-ஆம் பாடமாகிய குறைகடத்தி சாதனங்களும் அவற்றின் பயன்பாடுகளும் என்ற பாடத்தில் 3 கேள்விகள் கேட்கப்படும்.

மின்னூட்டத்தின் விளைவுகள், கதிர்வீச்சு பருப்பொருட்களின் இரட்டைப் பண்பு மற்றும் சார்பியல், தகவல் தொலைதொடர்புச் சாதனங்கள் என்ற 3, 7, 10 ஆகிய பாடங்களில் தலா இரண்டு வினாக்கள் கேட்கப்படும். மின்னோட்டவியல் 2-ஆம் பாடத்தில் ஒரு வினா மட்டும் கேட்கப்படும். மாணவர்களின் நுண்ணறிவை பரிசோதிக்கும் வகையில் இந்தக் கேள்விகள் இருக்கும்.

மொத்தமுள்ள 30 வினாக்களில் நேரிடையாக புத்தகத்தில் உள்ள பயிற்சிக் கேள்விகள் 18 இடம்பெறும். மீதம் உள்ள 12 கேள்விகளில் 6 கேள்விகள் பாடங்களில் உட்பகுதியிலிருந்து கேட்கப்படும். மீதம் உள்ள 6 வினாக்கள் முற்றிலும் புதியதாக அமையும். இவை பாடப்பகுதியில் உள்ள கருத்தியல் (Concept), சிறிய கணக்குகள் (Simple Problemds), சற்றே மாற்றி யோசிக்கும் கேள்விகள் (Thinking differently) ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் ஒரு வார்த்தை மாறினால் கூட விடை மாறுபடும் கேள்விகள் நிறைய உள்ளன. இவற்றைக் கண்டறிந்து (இதற்கு கடந்த கால பொதுத்தேர்வு வினாக்களை பயிற்சி செய்து பார்ப்பது நல்லது) கவனமாக விடை அளித்தல் அவசியம்.

 பகுதி 1-இல் கடினமாக கேட்கப்படும் கேள்விகள், தலைப்புகள் பாடவாரியாக கீழே பட்டியலிடப் பட்டுள்ளன. இத்தலைப்பில் உள்ள பாடம் சார்ந்த கருத்தியல், சிறிய கணக்குகள் ஆகியவற்றை பயிற்சி செய்யவும்.

பாடம் 1 நிலைமின்னியல்: கூலும் விதி, மின்புலச் செறிவு, மின்னழுத்தம் மின்னழுத்த வேறுபாடு, மின்தேக்கி, மின் இருமுனை, காஸ்விதி.

குறிப்பு : மின்தேக்குத்திறன், மின்னழுத்தம் மின்னூட்டம் இவற்றை சார்ந்தது அல்ல.

பாடம் 2 மின்னூட்டவியல்: மின்தடை எண், மின்தடை வெப்பநிலை எண், மின்னாற்றல், கார்பன் மின்தடைகள், மின்தடைகள் (தொடர் பக்க இணைப்பு).

குறிப்பு: மின் தடை எண், கம்பியின் குறுக்குவெட்டுப் பரப்பையோ, நீளத்தையோ சார்ந்தது அல்ல.

பாடம் 3 மின்னூட்டத்தின் விளைவு: ஜுல் விதி, டேன்ஜண்ட் கால்வனோ மீட்டர், லாரன்ஸ் விசை, காந்தப்புலத்தின் மின்னூட்டத் துகளின் இயக்கம், கால்வனோ மீட்டரை அம்மீட்டராகவும் வோல்ட் மீட்டராகவும் மாற்றுதல்.

குறிப்பு: காந்தப்புலத்தில் சுழலும் மின்னூட்டத்துகளின் சுழற்சிக் காலம் துகளின் திசைவேகத்தையோ, வட்டப்பாதையின் ஆரத்தையோ சார்ந்ததோ அல்ல.

பாடம் 4 மின்காந்தத் தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்: தூண்டப்பட்ட மின் இயக்க விசை (பாரடே விதி), மின்மாற்றி, தொலைதூர மின் திறன் அனுப்பீடு, RMS சுற்று, மாறுதிசை மின்னூட்டத்தின் RMS மதிப்பு.

குறிப்பு: கம்பிச்சுருளின் தன் மின் தூண்டல், எண் சுருளின் பாயும் மின்னோட்டத்தை சார்ந்தது அல்ல.

பாடம் 5 மின்காந்த அலைகளும் அலை ஒளியியலும்: ஒளிவிலகல் எண், பட்டை அகலம், கீற்றலை, புரூஸ்டர் விதி, நியூட்டன் வளையம்.

குறிப்பு: கீற்றணி மூலத்தின் அலகு மீட்டர்.

பாடம் 6 அணு இயற்பியல்: பிராக்விதி, தொடர் து கதிர் நிறைமாலை, ஹைட்ரஜன் நிறமாலை, போர் அணு மாதிரி, எலெக்ட்ரான் (e/m) மதிப்பு மற்றும் (e) மதிப்பு காணல்.

குறிப்பு: எலெக்ட்ரானின் மின்னூட்ட நிறைத்தகவு கேதோடு, வாயு இவற்றை சார்ந்ததல்ல.

பாடம் 7 கதிர்வீச்சு பருப்பொருட்களில் இரட்டை பண்பு மற்றும் சார்பியல்: ஒளிமின் விளைவு, பருப்பொருட்களின் அலை, அலை இயக்கவியல் கொள்கை, சார்பியல் நிறை மாறுபாடு, நிறை ஆற்றல் சமன்பாடு.

குறிப்பு: ஒளிமின்னோட்டம் கதிர்வீச்சின் அதிர் வெண் சார்ந்ததல்ல.

பாடம் 8 அணுக்கரு இயற்பியல்: பிணைப்பாற்றல், இடப்பெயர்ச்சி விதி, கதிரியக்கம், உட்கரு ஆரம், ஐசோடோப்புகள் ஐசோபார்கள், ஐகோடோன்கள்.

குறிப்பு: உட்கரு அடர்த்தி நிறை எண்ணை சார்ந்ததல்ல.

பாடம் 9 குறை கடத்தி சாதனங்களும் அவற்றின் பயன்பாடுகளும்: பெருக்கியின் பட்டை அகலம், அகமின்னழுத்த அரண், டீ மார்க்கன்விதி, லாஜிக்கேட்டுகள், செயல்பாட்டுப் பெருக்கி.

குறிப்பு: உலோகத்தின் பட்டை இடைவெளி சுழியாகும்.

பாடம் 10 தகவல் தொடர்புச் சாதனைகள்: கலக்கி பிரிக்கும் சுற்று, AM  பட்டை அகலம், FM அதிர்வெண் விலக்கம்; ஊர்தி அலைவு.

பகுதி - 1கேள்விகளுக்கான விடையளிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை: கேள்விகளை சரியாகப் படித்தபின் விடையளிக்கவும். பாடப்பகுதியில் உள்ள முக்கிய வாய்ப்பாடுகளைத் (Formula) தெரிந்துகொண்டு சரியான இடத்தில் பயன்படுத்த பயிற்சி மேற்கொள்ளவேண்டும். இதில் அனைத்துக் கேள்விகளுக்கும் நான்கு விடைகள் தரப்பட்டிருக்கும். இதில் சரியான விடை எது எனத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். சில நேரங்களில் நான்குமே சரியானது போலத் தோன்றும். குழப்பத்தை ஏற்படுத்துவது போல இருக்கும். இதையெல்லாம் தாண்டி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கப் பயிற்சி அவசியம் தேவை.

பெரிய வினாக்களுக்குப் படித்த விடைகளில் இருந்தே ஒரு மதிப்பெண் வினாக்களுக்காகப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

பகுதி II-Part B-ல் மூன்று மதிப்பெண் கேள்விகள் (மொத்தம் 30 மதிப்பெண்கள்) கேட்கப்படும். இப்பகுதியில் 20 கேள்விகள் கேட்கப்படும். இதில் 5 கணக்குகள் இடம்பெற்றிருக்கும். 9-ஆம் பாடத்தில் அதிகபட்சமாக 4 கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் இரண்டு கேள்விகள் பொதுவாக வரையறை, விதி, பயன்பாடு, வேறுபாடு கருத்தியியல் (Concept) சார்ந்த கேள்விகளாக அமையும்.

ஒரு கேள்வி கணக்கியலாக அமையும். பொதுவாக பின்னூட்டம், டிமார்க்கன் விதி, பூலியன் எண் கணிதத்துடன் தொடர்புடைய லாஜிக்கேட்டு கணக்குகள், மின்னோட்டப் பெருக்க எண்கள் இவற்றிற்கிடையே உள்ள தொடர், செயல்பாட்டுப் பெருக்கி சுற்றுபட கணக்குகள் இவற்றில் ஏதாவது ஒன்று இந்தப் பகுதியில் இடம்பெறும்.

ஒரு வினா சுற்றுப்படமாக அமையும். அவை பொதுவாக ஆற்றல் மட்ட வரைபடம், லாஜிக்கேட், செயல்பாட்டுப் பெருக்கி, டிரான்சிஸ்டல் CE, CC, CB தொடர்புடையதாக அமையும். 2-ஆவது பாடத்திலிருந்து 3 கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் இரண்டு நேரிடையான கேள்விகளும், ஒரு கணக்கும் இடம்பெறும். கணக்குகள் பொதுவாக மின்தடை வெப்பநிலை எண், மின்னாற்றல் கணக்கிடல், மின்தடை எண், மின்தடைகள் தொடர் பக்க இணைப்புகள், இழுப்புத் திசைவேகம் சார்ந்ததாக அமையும். 1, 4, 5, 6, 8 ஆகிய பாடங்களில் இருந்து தலா இரண்டு கேள்விகள் கேட்கப்படும். 3, 7, 10 ஆகிய பாடங்களில் இருந்து தலா ஒரு கேள்வி கேட்கப்படும்.

பொதுவாக அனைத்துப் பாடங்களிலும் உள்ள விதிகள், வரையறைகள், பண்புகள், பயன்பாடுகள், நல்லியல்பு, வரம்புகள், வேறுபாடுகள் கருத்தியல் (Concept) காரணங்கள் கூறுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய கேள்விகளை நன்கு கற்றல் அவசியம். கணக்கு தொடர்பாக 1, 4, 5, 6, 8 ஆகிய பாடங்களில் உள் தீர்க்கப்பட்ட கணக்குகளை நன்கு போட்டுப் பார்த்துப் பழகுங்கள்.

 பகுதி IIIல் ஐந்து மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 35 மதிப்பெண்கள். இதில் மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொன்றிற்கும் 5 மதிப்பெண்கள். எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். இதில் 3 கணக்குகள் இடம்பெறும். அதில் ஒரு கணக்கு, கண்டிப்பாகத் தீர்க்கப்படவேண்டிய கணக்காக அமையும். கணக்கைத் தவிர்த்துவிட்டு, ஏழு கேள்விகளுக்கும் கருத்தியல் முறையில் (தியரி) விடையளித்தால், ஆறு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். எனவே, கட்டாயம் விடையளிக்க வேண்டிய கணக்கை நாம் தவிர்க்கவே முடியாது. அப்படித் தவிர்த்தால், 5 மதிப்பெண்களை இழக்கவேண்டி வரும்.

கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில், கட்டாயக் கணக்குகள் எந்தெந்தப் பாடங்களில் இருந்து இதுவரை அதிகமாக கேட்கப்பட்டிருக்கின்றன தெரியுமா? 8-ஆவது பாடத்திலிருந்து 6 முறையும், 5-ஆவது பாடத்திலிருந்து 5 முறையும், 3-ஆவது பாடத்திலிருந்து நான்கு முறையும், 2-ஆவது பாடத்திலிருந்து 3 முறையும், 7-ஆவது பாடத்திலிருந்து இரண்டு முறையும், 1-ஆவது பாடத்திலிருந்து ஒரு முறையும் கேட்கப்பட்டிருக்கின்றன.

8-ஆம் பாடத்தில் உள்ள அனைத்து தீர்க்கப்பட்ட கணக்குகளும் மிக முக்கியமானவை. இதுவரை கேட்கப்படாத ஆனால் மிக முக்கியமான, பாடம் 6-இல் உள்ள கணக்குகளை நன்கு அறிந்துகொள்ளுதல் மிக அவசியம் ஆகும்.

கணக்கு தவிர மற்ற கேள்விகள் வருவித்தல் (Derivation), கருத்தியல், பண்புகள், பயன்பாடுகள், வேறுபாடுகள் குறித்த கேள்விகளாக அமையும். 2 மற்றும் 7 பாடங்கள் பகுதி-III இல் மிக முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு பாடத்திலும் தலா இரண்டு கேள்விகள் இடம்பெறும். எனவே இவ்விரு பாடங்களிலிருந்து நான்கு கேள்விகளுக்கு விடை எழுத முடியும். இப்பாடப் பகுதியிலுள்ள கணக்குகளையும் நன்கு கற்றல் மிக அவசியம். மற்ற பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் தலா ஒரு கேள்வி இடம்பெறும்.

கணக்கீடுகள் கீழ்கண்ட படிகளைக் கொண்டதாக அமைய வேண்டும்:

கொடுக்கப்பட்ட தகவல்கள் (Data), வாய்ப்பாடு (Formula), பிரிதியிடுதல் (Substitution), சுருக்குதல் (Simpliication), முடிவு, அலகு (Result, Unit).

கேள்விகளை தேர்வு செய்யும் முறை: எந்தக் கேள்வியைக் குறைந்த காலத்தில் எழுத முடியுமோ அந்தக் கேள்வியை தேர்வு செய்தல் அவசியம். கண்டிப்பாக தீர்க்க வேண்டிய கணக்குகளைத் தவிர மற்ற கணக்குகள் நன்கு தெரிந்திருந்தால் மட்டும் தேர்வு செய்தால் போதும். வருவித்தல், பண்புகள், பயன்பாடுகள, வேறுபாடுகள், கருத்தியல், கணக்கீடுகள் என்ற வரிசையில் கேள்விகளை தேர்வு செய்தல் வேண்டும். இதனால், குறைந்த நேரத்தில் அதிகக் கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.

பகுதி IV-ல் பத்து மதிப்பெண் கேள்விகள் (மொத்தம் 40 மதிப்பெண்களுக்கு) இடம்பெறும். 1, 3, 4, 5, 6, 8, 9, 10 ஆகிய பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி என்ற வகையில் மொத்தம் 8 கேள்விகள் கேட்கப்படும்.

8 பாடங்கள் தரப்பட்டாலும் பாடங்கள் 1, 3, 4, 6, 8 ஆகிய பாடங்கள் மற்றும் 5, 9, 10 ஆகிய பாடங்களில் இருந்து சில குறிப்பிட்ட கேள்விகளை தேர்வு செய்து படித்தாலே எளிதில் இப்பகுதியில் மதிப்பெண்கள் பெற முடியும். 5, 9, 10 ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்படும் சில முக்கியக் கேள்விகள் வருமாறு:

பாடம் 5: இராமன் விளைவு, குறுக்கீட்டுப் பட்டைக்கான அகலம், உட்கவர் வெளியிட நிறைமலை, முழு அக எதிரொலிப்பு ஹைஜன் தத்துவம் விளக்கம்.

பாடம் 9: சமனச்சுற்று அலைதிருத்தி, கால்பிட் அலையியற்றி, பின்னூட்டத் தத்துவம், செயல்பாட்டு கூட்டல் பெருக்கி.

பாடம் 10: AM– பகுப்பாய்வு, ரேடார், AM கலக்கி பிரிக்கும் சுற்று ஆகிய கேள்விகளைப் படித்தாலே போதுமானது.

பொதுவாக கேள்விகளைச் தேர்வு செய்யும்போது, வருவித்தல், கருவிகள், கருத்தியில் என்ற வரிசையில் கேள்விகளைத் தேர்வு செய்தல் வேண்டும்.

நேர மேலாண்மை: தேர்வு நடைபெறும் மூன்று மணி நேரத்தை (180 நிமிடங்கள்) கீழ்க்கண்டவாறு பிரித்து செயல்பட்டால் முழுமையாக அனைத்து வினாக்களுக்கான விடைகளையும் எழுதிவிட முடியும்.

 பகுதி I : 30 x 1 நிமிடம்              : 30 நிமிடங்கள்
பகுதி II : 15/20 x 2 நிமிடம்         : 30 நிமிடங்கள்
பகுதி III : 7/12  x 7 நிமிடம்         : 49 நிமிடங்கள்
பகுதி IV : 4/8  x 15 நிமிடம்        : 60 நிமிடங்கள்

மொத்த நேரம்: 169 நிமிடங்கள். மீதம் உள்ள 11 நிமிடங்கள்தான் மிக முக்கியமான மணித்துளிகள். இந்தக் காலத்தை கீழே உள்ளவாறு பயன்படுத்துதல் அவசியம்.

பகுதி I-இல் 30 கேள்விகளுக்கான விடைகளை சரியாக எழுதியிருக்கிறீர்களா என சரிபார்க்க. பகுதி IIஇல் 15 கேள்விகள் எழுதப் பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்க. பகுதி III, IV - இல் தலா 7 மற்றும் 4 கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்க. படங்கள் சரியாக வரையப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்க. விதிகள், வரையறைகள் புத்தகத்தில் உள்ளவாறு சரியான வார்த்தைகளில் விடையளிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்க. கணக்கீடுகளில் வாய்ப்பாடுகள் சரியாக எழுதப்பட்டுள்ளனவா என்றும், சரியான முடிவுகள் சரியான அலகுகளுடன் எழுதப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்க.
பகுதி II-இல் உள்ள மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு சிறிய தலைப்பிட்டு எழுதுக. தேவையான இடத்தில் வாய்ப்பாடு அல்லது அலகு ஆகியவற்றை கட்டமிட்டுக் காட்டுக.

முயற்சியும், தன்னம்பிக்கையும், உழைப்பும் இருந்தால் இயற்பியல் பாடத்திலும் நூற்றுக்கு நூறு எடுக்கலாம். அப்படியில்லாவிட்டாலும் மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்.

பா. பால்துரை,
முதுகலை இயற்பியல் ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
காஞ்சிகோவில், ஈரோடு மாவட்டம்.

No comments: