Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 22 December 2013

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப தீர்மானம்

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை உதவியாளர் சங்கத்தின் 2-வது மாநில மாநாடு, அரசு ஊழியர் சங்க கட்டட  வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை உதவியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரா.ரவி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெ.லட்சுமிநாராயணன் வரவேற்புரை வழங்கினார். இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரா.பாலசுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், சங்கத்தின் பணிகள் குறித்த வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் சி.சரவணன் வாசித்தார். மாநில பொருளாளர் வை.காளிமுத்து வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், மாநில தலைவர் இ.சர்வேஸ்வரன், மாநில செயலாளர் ஜே.ராஜ்மோகன், பொதுச் செயலாளர்கள் கே.லட்சுமணன், சிவவோதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ச.இ.கண்ணன் நிறைவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனே நிரப்ப வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் இப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தேர்வு செய்ய பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். முறையாக கலந்தாய்வை நடத்தி முறைகேடுகளுக்கு இடம் அளிக்காமல் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு வீட்டு மனை வாங்கவும், கட்டவும் கடன் உதவி வழங்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிர்வாகிகள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். இச்சங்கத்தின் அமைப்புச் செயலாளர் என்.நடராஜன் நன்றியுரை வழங்கினார்.  

No comments: