விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி காஞ்சிபுரம், வேலூர் உள்பட 10 இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது.
பாலிடெக்னிக் ஆசிரியர்கள் போராட்டம்
பாலிடெக்னிக் கல்லூரி மாண வர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 25-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு கைமாறு ஊதியம், தினப்படி, பயணப்படி ஆகிய வற்றை உயர்த்தி வழங்கக்கோரி மதிப்பீட்டு பணியில் ஈடுபட்ட பாலி டெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் வியாழக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், வேலூர், திருச்சி தொட்டியம், நாகப்பட்டினம், விருதுநகர், அருப்புக்கோட்டை, கீழக்கரை, மதுரை, திண்டுக்கல், சிவகாசி ஆகிய 10 மையங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி.தினகரன் கூறியதாவது:-
விடைத்தாள் திருத்துவதற்கு கைமாறு ஊதியமாக தாள் ஒன்றுக்கு ரூ.7-ம் தினப்படியாக வெளியூர் ஆசிரியர்களுக்கு ரூ.190-ம், உள்ளூர் ஆசிரியர்களுக்கு ரூ.115-ம் வழங்குகிறார்கள். போக்குவரத்து படியாக கிலோ மீட்டருக்கு 75 பைசா என்ற வீதத்தில் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 2008-ம் ஆண்டு அமல்செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அவை திருத்தியமைக்கப்படவில்லை.
அரசு பள்ளி ஆசிரியர்கள், பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு இதே பணிக்கு எங்களைவிட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள், பொறியியல் கல்லூரி ஆசிரியர்களைப் போன்று பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கும் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பாலிடெக்னிக் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment