Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 18 October 2013

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் (தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் நீங்கலாக) ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டுவர மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்துள்ளது. இதற்காக மூத்த பேராசிரியர்களைக் கொண்ட பொது பாடத்திட்ட கல்விக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.
20 பல்கலைக்கழகங்கள்
தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், பொறியியல், விவசாயம், மருத்துவம், கால்நடை மருத்துவம், உடற்கல்வி, கல்வியியல், மீன்வளம் ஆகிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும் அடங்கும்.
சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் கலை- அறிவியல் படிப்புகள் சம்பந்தப்பட்டவை . அவை தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட கலை -அறிவியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம், பாடத்திட்டத்தை உருவாக்குவது, தேர்வுகள் நடத்தி பட்டச் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.
தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு பாடத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணத்துக்கு, ஒரு பல்கலைக்கழகத்தின் பி.ஏ. வரலாறு படிப்புக்கான பாடத்திட்டம் மற்றொரு பல்கலைக்கழகத்தின் இதே பட்டப் படிப்பைப் போல் இருப்பதில்லை.
இதனால், ஒரே பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்பு என்றாலும் ஒவ்வொன்றும் மற்ற பல்கலைக்கழக படிப்புக்கு இணையானதா என்ற சிக்கல் அடிக்கடி எழுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பதற்காகவே டி.என்.பி.எஸ்.சி.யில் இணைகல்வி தகுதிக் குழு (ஈகுவேலன்ட் கமிட்டி) என்ற சிறப்பு குழு உள்ளது.
இனி ஒரே பாடத்திட்டம்
இதுபோன்று பிரச்சினை எழும் நேரங்களில் அந்த குழு கூடி சர்ச்சைக்குரிய பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தை ஆராய்ந்து அது இணையானதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும். ஒரே பட்டப் படிப்பு என்ற போதிலும் பாடத்திட்டம் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் வேறு வேறாக இருப்பதால் மாணவர்களும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரேமாதிரியான பொதுப்பாடத்திட்டத்தைக் கொண்டுவர மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
மாணவர்களுக்கு வரப்பிரசாதம்
பாடத்திட்டம் எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்பட்சத்தில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மாநிலத்துக்குள் எளிதாக வேறு கல்லூரிக்கு மாறி படிப்பை தொடரலாம்.
அனைத்துப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டமும் இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படும். பாடத்திட்டம் ஒன்றுபோல் இருப்பதால் கல்வித்தரமும் மாநிலம் முழுவதும் சமமாக இருக்கும்.
பொதுப் பாடத்திட்ட கல்விக்குழு
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டுவரும் வகையில் ஒருங்கிணைந்த பொதுப் பாடத்திட்ட கல்விக்குழு விரைவில் அமைக்கப்பட இருப்பதாகவும், அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள் இக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர் பேராசிரியர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

No comments: