Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 15 October 2013

அரசு + ஆசிரியர் + மாணவர் = சமச்சீர்க் கல்வி

இன்றைய சமகாலக் கல்வியில் சமச்சீர் என்ற வார்த்தை எல்லார் வாயிலும் உச்சரிக்கப்படும் ஒன்று. கடந்த வருடங்களில் தொடங்கிய சமச்சீர்க் கல்வி தற்போது ஒன்பதாம் வகுப்பிற்குப் பாய்ந்துள்ளதை அநேகர் ஆதரிக்கின்றனர். சிலர் புறக்கணிக்கின்றனர். அந்த விஷயத்திற்கு நாம் போகத்தேவையில்லை. இப்போது நாம் பார்க்கப்போவது, அரசு - ஆசிரியர் - மாணவர் என்ற சிறிய முக்கோணத்திற்குள் இயக்கப்படும் சமச்சீர்க் கல்விக் கொள்கையைப் பற்றியதுதான்.
சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முன்னிலைப்படுத்திய அரசின் செயல்பாட்டைப் பற்றி முதலில் காண்போம். ஏற்கெனவே இருந்த கல்விக் கொள்கையில் உள்ள பின்னடைவு அல்லது சமூக மாற்றத்திற்கான புதியவழிக் கல்விக்கொள்கையாக இது அமையும் என அரசு நினைத்திருக்கலாம்.
வழக்கமான பாடத்திட்டத்தில் ஒவ்வொரு மாதம், ஒவ்வொரு வாரம் ஆசிரியர் நடத்த வேண்டிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்தந்த வாரத்திற்குள்ளான பாடத்தை நடத்தி, தேர்வு வைத்து, மாணவர்களை தேர்ச்சி அடைய வைக்கவேண்டும் என்கிற உத்வேகம் அதில் இருக்கும். இதனடிப்படையில் காலாண்டு தொடங்கி முழுவாண்டு வரையிலான தேர்வுகளும், அதற்குள் இடைப்பருவத் தேர்வுகளும் நடக்கும். ஒரு மாணவனின் தேர்ச்சி வெற்றி என்பது பாட அளவில் குறைந்தது 35 சதவீதம், அதிகபட்சம் 100 சதவீதம்.
இது இப்போது சமச்சீர்கல்வியில் மாறி இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும், இந்த வாரம் நடத்தவேண்டிய பாடம் எது, அதில் ஆசிரியர் தரவேண்டிய வளரறி மதிப்பீடுகள் FA (a), (b) (1. வகுப்பறையில் மாணவரின் பாட எதிர்வினை), (2.மாணவர்களுக்குத் தரவேண்டிய செயல்திட்டம்) எவை என்பது குறிப்பிடப்பட்டுள்து நாம் வரவேற்கத் தகுந்த ஒன்று. அரசின் பாடத்திட்டத்தினை ஆசிரியர்கள் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்கிற அரசின் நெகிழ்வுத்தன்மையையும் நாம் பாராட்டவேண்டும். ஆக, இத்துடன் அரசின் மகத்தான பணி தொடங்கிவிட்டது..
அடுத்து, ஆசிரியர்களின் நிலையைப் பார்ப்போம். அரசு வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின்படி அவர்கள் நடந்துகொள்கிறார்களா என்பதே ஐயம். இன்னும் இதை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டும், அவர்கள் தெளிவு அடையவில்லை என்றே தோன்றுகிறது. பாடத்திட்டத்தின்படி குறுதேர்வு வினாத்தாள்களை (மாதிரிகளை அரசு வழங்கியுள்ளது) அவர்கள் தயாரித்து, மாணவர்களுக்குக் கற்றலடைவுச் சிறு மதிப்பீடு வைத்து, மதிப்பெண்ணைப் பதிவேட்டில் குறிக்கிறார்களா அல்லது 'ஏறக்குறைய' என்ற அடிப்படையில், மாணவர்களின் கல்வித்தரத்தை வைத்து மதிப்பெண் தருகிறார்களா என்பது தெரியவில்லை.
உதாரணமாக, வளரறி மதிப்பீடு-அ-விற்கு 40 மதிப்பெண். அதில் ஏதாவது நான்கு பாடவேளையில், 10 மதிப்பெண்ணிற்கு 4 ஆக வைத்துக் கொள்ளலாம். இதற்கு ஆதாரம் தேவையில்லை. அதாவது பாடம் நடத்தும்போது முன்னும் பின்னுமாகக் கற்றல் - கற்பித்தலில் மாணவனின் எதிர்வினை என்பதால் தேவையில்லை. எனவே ஆசிரியர்கள் தாராளமாக, நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண், மோசமாகப் படிக்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் குறித்துக்கொள்ளலாம் என்கிற அவல நிலை இதில் ஏற்படுகிறது. இப்படி 4 மதிப்பீடுகளிலும் இச்செயல் நிகழும்.
மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் இந்த தவறைச் செய்வதில்லை. தெளிவற்ற, குழப்பமான, ஆதாரம் எதுவும் தேவையில்லை என்கிற நிலையை உணர்ந்த சில மோசமான ஆசிரியர்கள் மதிப்பெண்ணை வழங்கிவிடுகிறார்கள். இது மாணவர்களைப் பாதிக்கும் ஒன்று.
கம்பர் பற்றி ஆசிரியர் வினவும் ஐயங்களுக்கு, உடனடியாகப் பதில் தரும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவது தவறில்லை. பதிலளிக்க தயங்கும், அதைப்பற்றித் தெரியாத மாணவர்களுக்குக் கம்பர் பற்றி விஷயங்களை, அம்மாணவர்களுக்குச் சொல்லி, அவர்களைத் திரும்ப சொல்ல வைக்கவேண்டும் என்று கல்விக்கொள்கை சொல்கிறது. இதை ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் மகிழ்ச்சிதான்.
பாடக்குறிப்பேட்டில் பயன்படுத்தும் கருவிகள் என்ன என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர்கள், அதைக் கடைபிடிக்கும்போது கற்பித்தல் சிறப்பாக நடைபெறும். தனக்கான வளரறி மதிப்பீடுகளை (குறுந்தேர்வு, செயல்திட்டம்) ஆசிரியர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்கிற முழு சுதந்திரத்தை அரசு வழங்கிய பின், பொதுபுத்தி மனோநிலையில், எல்லா பாட ஆசிரியர்களும் அதைப் பின்பற்றும் செக்குமாட்டுத்தனத்தை விடவேண்டும். அவர்களாக, தம் மாணவர்களின் கல்வித் தரத்தினை முன்னேற்றும் வகையில் வளரறி மதிப்பீடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும்.
கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட செயல்திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும். அதாவது பள்ளு இலக்கியம் பற்றியோ, அக்பர் பற்றியோ செயல்திட்டம் தரும்போது, கிராமப்புற மாணவர்களுக்கு அதற்கான வழிவகைகள் அமைவதில்லை. இணையமோ, நூலகமோ இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு ஆசிரியர்தான் பள்ளி வழியாகவோ, தன்னுடைய பொருளாதாரத்தின் வழியாகவோ செய்யவேண்டும். அவர்கள் நாம் பெறாத பிள்ளைகள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். செய்வார்களா ஆசிரியர்கள்? பாடத்தினைத் தவிர்த்து, பாடம் தொடர்பான பல விஷயங்களை மாணவர்கள் கற்கத்தான் சமச்சீர்க்கல்வி. இதை மாணவர்களிடம் கையளிப்பார்களா ஆசிரியர்கள்?
இனி, மாணவர்கள். இந்தக் கல்விக்கொள்கை இவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்றும் இவர்கள் அறிவாளியாக ஆக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது வகுப்பறையில் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் நகர மாணவர்களைவிட, கிராமப்புற மாணவர்கள் நிலைதான் படுமோசம். நெகிழ்வான கல்விக்கொள்கையினை அவர்கள் சிறிது தடுமாற்றத்துடன் வரவேற்கிறார்கள். காரணம் செக்குமாட்டு வாசிப்பிலிருந்து, புதிய, எளிமையான கற்றல் தளத்திற்கு அவர்கள் மாறிவிட்டதே. கடைசி பெஞ்ச் மாணவர்களை முதல் பெஞ்ச மாணவர்களாக மாற்றுவதே இக்கொள்கை. ஆனால், அவர்கள் உழைக்காமலேயே மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள். அதாவது குறைந்த மதிப்பெண் 5. இதிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும். குழு மனப்பான்மையுடன் கற்றல்திறன் அதிகம் உள்ள மாணவர்களுடன், ஆசிரியருடன் இணைந்து தம் கற்றலை மேம்படுத்த முனையவேண்டும்.
ஆசிரியர் வழியாக மட்டும் கற்றல் என்பது இல்லாமல், ஆசிரியர் உதவியுடன் கற்றல் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். இணையமோ, நூலகமோ இல்லாத கிராமம் எனில், ஆசிரியர்கள் உதவியுடன் கற்றலை உருவாக்கிக்கொள்ளலாம். அதற்கு மாணவனின் வேட்கையும் வேகமும் தான், ஆசிரியர்களை உழைக்கச்செய்யும். அந்த வேட்கையையும் வேகத்தையும் மாணவர்கள் பெற்றிடவேண்டும். இலவச மதிப்பெண்களைப் புறக்கணித்து, தனது தகுதியை மேம்படுத்தி, தன் உழைப்பு மதிப்பெண் பெற முயலவேண்டும். மிகத் தைரியமாக, ஆசிரியர்களிடம் உதவி கேட்கவேண்டும். தன்னுடைய கற்றலில் உள்ள குறைபாடுகள் எவை? அவற்றை எவ்வாறு போக்குவது? என்கிற ஆலோசனையை மாணவர்கள் ஆசிரியரிடம் பெறவேண்டும். அரைகுறை கல்வி அறிவு பெற்ற பெற்றோர், கிராமத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு, மிகச் சிறந்த இடம் பள்ளிதான். அதை இவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கடைசியாக சில விஷயங்கள்...
அரசு செய்யவேண்டியவை
1. அரசு மிகச் சிறந்த பாடத்திட்டத்தினைத் தயாரித்துள்ளது. கூடவே way2cee.com என்ற இணையத்தின் வழியாக ஆசிரியர்களுக்கான இ-மதிப்பெண் பதிவேடு தயாரித்துள்ளது. (இதில் பெரும்பாலான பள்ளிகள் தங்கள் பெயரினைப் பதிவு செய்துகொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. எத்தனை ஆசிரியர்களுக்கு இது தெரியும் என்றும் தெரியவில்லை. இதில் மதிப்பெண்களைப் பதிவு செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தை அரசு உருவாக்கவேண்டும்.)
2. நூலகமோ, இணையமோ இல்லாத ஊர்களில் இயங்கும் பள்ளிகளில், மாணவர்கள் பயன்படுத்த கணினி வசதியை ஏற்படுத்தியிருந்தாலும், அது முழுமையாகச் செயல்படுகிறதா என்பதை கவனிக்கவேண்டும்.
3. மாணவர்கள் கற்றலை மேம்படுத்த, ஆசிரியர் அளிக்கும் செயல்திட்டங்களை உருவாக்க 'நூலகம்' என்கிற பாடவேளையை உருவாக்கவேண்டும்.
4. ஆசிரியர்கள் பள்ளியில் உள்ள கணினியைப் பயன்படுத்திக்கொள்ள, அச்சு (print) எடுத்துக்கொள்ள தலைமையாசிரியர் அனுமதிக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அரசு ஆணையிடவேண்டும். (பெரும்பாலான பள்ளிகளில் பணம் இல்லை என்கிற கதையைத் தான் தலைமையாசிரியர்கள் சொல்கிறார்கள். பல தலைமையாசிரியர்களுக்குக் கணினியை இயக்கத் தெரியாது என்பது வேறு விஷயம்)
5. கணிப்பொறி என்கிற பாடவேளையை அரசு உருவாக்கியுள்ளமைக்கு நன்றி. ஆனால் கிராமப்புற மாணவர்கள் அத்தனைபேருக்கும் கணிப்பொறி இயக்கத் தெரிந்திருக்கிறதா என்பதைக் அவ்வப்போது கண்காணிக்கும் பணியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆசிரியர்கள் செய்யவேண்டியவை
1. தலைமை ஆசிரியர்கள் உதவியில்லாமல், முழு முயற்சி எடுத்துத் தன் பொருளாதாரத்தினை முன்வைத்து கற்றலுக்கான கருவிகளை மாணவர்களுக்குத் தயாரித்துத் தர முன் வரவேண்டும்.
2. கற்றல் குறைவான மாணவர்களுக்கு, இவர்கள் நம் பிள்ளைகள் என்கிற உணர்வுடன் மீண்டும் கற்பிக்கவேண்டும்.
3. இணையத்தை இயக்கவும், தேடுபொறியில் செயல்படவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். (கணிப்பொறி பாடவேளை என்பது வெறும் பாடவேளையாக இருக்கிறது.) ஒவ்வொரு மாணவரும் கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறார்களா என்பது குறித்து ஆசிரியர்கள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
மாணவர்கள் செய்யவேண்டியவை
1. கற்றல் குறைவாக இருப்பின், தகுந்த பாட ஆசிரியரிடம் தன் கற்றலை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
2. செயல்திட்டத்திற்கான கருவிகள் இல்லாதபோது, ஆசிரியரிடமே அதைப் பெற்று செயல்படவேண்டும்.
3. இலவச மதிப்பெண்ணை மறுத்து, உழைப்பு மதிப்பெண்ணைப் பெற வேண்டும்.
4. எந்த தயக்கமும் இல்லாமல், தன் ஐயங்களைக் கேட்டு தெளிவு கொள்ளவேண்டும்.

No comments: