Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 6 April 2015

TRB: உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் - பிஎச்.டி. முடித்திருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம்

தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.9.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டுக்குரியவை ஆகும்.
2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. முடித்திருந்தால் மட்டும் தகுதித்தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த விதிமுறையைத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம் செய்து அதன்படியே, உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களைப் பெற்றது.
ஆசிரியர் பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, தமிழ், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு இறுதி தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, உளவியல், சமூகவியல், சமஸ்கிருதம், இந்திய கலாசாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 25-ம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு மார்ச் 31-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வுப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, உதவி பேராசிரியர் பணிக்கு, பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களில், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பிஎச்டி பட்டதாரிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.
எனவே, ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய புதிய தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்படுமா? அல்லது முதலில் பணிக்கு அனுமதித்து குறிப்பிட்ட காலத்துக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற கால அவகாசம் அளிக்கப்படுமா? என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1 comment:

senthil kumar said...

நெட் ஸ்லெட் முடித்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகவுள்ளது .இத்தேர்வுகளின் பயன்பாடு இனிமேல் அதிகமாக தேவைப்படும் நன்றி