Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 30 November 2015

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, பணியில் இருக்கும் பேராசிரியர்களுக்கும் வேலைப் பளு ஏற்படுவதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க (ஏயுடி) பொதுச் செயலாளர் என். பசுபதி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 135 அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. 
இந்த நிலையில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 3,120 பேராசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பதாக கடந்த 2012 மே 22-ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அதை நிரப்புவதற்கான அரசாணையையும் பிறப்பித்தது. அதன்படி, இதுவரை 1,100 பேராசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது 2012-ஆம் ஆண்டு நிலைமை.
அதன் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் காலிப் பணியிடங்களையும் கணக்கிட்டால், பேராசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டும்.
இதுகுறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு கேட்கும்போது, உயர் அதிகாரிகளின் தலையீடு காரணமாகவே இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை எனத் தெரிவித்தனர். இதனால், இந்தக் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, பணியில் இருக்கும் பேராசிரியர்களுக்கு வேலைப் பளு கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments: