B.Ed admission guideline for the academic year 2015-16
நிகழ் கல்வியாண்டுக்கான ( 2015-16) பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயன்பாட்டு வேதியியல் (அப்ளைடு கெமிஸ்ட்ரி) துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.
கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், உயரி இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், பயன்பாட்டு வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரித் தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண் உயிரியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளநிலை பட்டங்களை முடித்தவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
ஓ.சி. பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், பி.சி, பி.சி.எம். பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீதமும், எம்.பி.சி. பிரிவினர் 43 சதவீதமும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்சிஏ பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருப்பது அவசியம்.
பொருளாதாரம், வணிகவியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், இந்திய கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். இதுவரை ஓராண்டாக இருந்துவந்த பி.எட். படிப்புக் காலம், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment