Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 16 July 2015

பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிகள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்படுகிறதா?

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவிகள் அடுத்தடுத்து பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் கூறி வருவதும், பல்கலைக்கழக நிர்வாகம் புகார்களை மறுத்து வருவதும் வாடிக்கையாக மாறியுள்ளது.
நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது பாலியல் மற்றும் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்ச்சிப் படிப்பு மாணவிகள் இருவர், காவல்துறை மற்றும் ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து, சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்ததாகவும், அவர்கள் நடத்திய விசாரணையில் ஆராய்ச்சி படிப்பு மாணவி அனிதா ரஞ்சன் தெரிவித்தது உண்மை இல்லை என தெரிய வந்ததாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஞா.ஜேம்ஸ்பிச்சை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மாணவிக்கு ஆதரவாக ஒரு பிரிவு மாணவர்களும், புகாருக்குள்ளான பேராசிரியருக்கு ஆதரவாக ஒரு பிரிவு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி அனிதா ரஞ்சன் தெரிவித்த புகார் புயல் அடங்குவதற்குள், ஆங்கிலத் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எலசம்மா செபாஸ்டியன் என்ற மாணவியும் லஞ்சம், பாலியல் புகார் கூறி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
நம்பிக்கை பாழாகும்
இவ்வாறு அடுத்தடுத்து தொடுக்கப்படும் புகார் குறித்து தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்கலைக்கழகத்தின் நம்பிக்கை பாழாகிவிடும் என பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத்தின் மூத்த பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த ஆண்டு மே மாதம் பல்கலைக்கழகத்தின் 3 சிண்டிகேட் பதவிகள் காலியாக இருந்தன. அந்தப் பதவிகள் பேராசிரியராக உள்ளவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்பது விதி. ஆனால், ஆங்கிலத் துறையில் இணைப் பேராசிரியர் அந்தஸ்தில் இருந்தவரை சிண்டிகேட் உறுப்பினராகத் தேர்வு செய்ததோடு, 2 ஆண்டுகள் முன் தேதியிட்டு பதவியில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பணிமூப்பு அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சிண்டிகேட் பொறுப்புக்கு காத்திருக்கும் தகுதியான பேராசிரியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது அதிகார துஷ்பிரயோகமாகும். சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேர்மையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் விதி. இல்லையெனில், அவர் மீதான புகாரை, பதவியில் உள்ள சிண்டிகேட் உறுப்பினர்களால் நேர்மையான விசாரணை நடத்த முடியாது. மற்றொரு முக்கியமான விஷயம், சிண்டிகேட் உறுப்பினர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்படும்போது மகளிர் ஆணையத்தின் பிரதிநிதியைக் கொண்டு விசாரித்தால்தான் சரியாக இருக்கும். சமீபத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சமரசம் என்பதே கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு உள்ள நிலையில், புகார் தெரிவித்த அனிதா ரஞ்சனிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்துக் கொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.
‘ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிப்பதற்காக ‘உள் நிறுவன புகார் குழு’ அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இது 2013-ம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் இருக்க வேண்டும். குழுவின் தலைவரும் பெண்ணாக இருக்க வேண்டும். அந்தக் குழுவில் இடம் பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் இல்லாத பெண்களாகவும், சமூக ஆர்வலர்களாகவும் இருக்க வேண்டும். அந்தக் குழு ஏன் முதலில் இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்கவில்லை’ என மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: