பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பகுதி நேரப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
உயர் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும், ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையிலும் பேராசிரியர்கள் அல்லாத பல்வேறு துறை வல்லுநர்களை பகுதி நேர பேராசிரியர்களாக நியமனம் செய்து கொள்ளும் வகையில் புதியத் திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.
அதாவது பிரபல விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், கலைஞர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பிற தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியிலிருந்து ஓய்வுபெற்ற வல்லுநர்கள் ஆகியோர், பேராசிரியருக்கான முறையான கல்வித் தகுதியை அவர்கள் பெற்றிருக்காவிட்டாலும்கூட பகுதி நேர பேராசிரியர்களாக நியமிக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.
இதற்கான வழிகாட்டுதலை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த வல்லுநர்கள் முதுநிலை பட்டமோ, ஆராய்ச்சி பட்டமோ பெற்றிருக்கவில்லை என்றாலும் அவர்களின் திறமை, பதவி ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்சம் 6 மாதங்கள், அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பகுதி நேர பேராசிரியராக நியமனம் செய்து கொள்ளலாம்.
இவர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவது, பயிலரங்கம் அமைத்து துறை சார்ந்த பயிற்சிகளை அளிப்பது என்பதோடு பிற பேராசிரியர்களுக்கு ஆலோசகராகவும் செயல்படலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது.
மேலும், இவ்வாறு நியமிக்கப்படும் பகுதிநேர பேராசிரியர்கள் பதவிக் கால முடிவில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கும், யுஜிசி-க்கும் தன்னுடைய செயல்பாடு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் செயல்பாடு அறிக்கையின் அடிப்படையில், தேவைப்பட்டால் அவரை மீண்டும் பணியமர்த்திக் கொள்ளலாம் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment