அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசச் சீருடை, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களை பள்ளி திறக்கும் நாளான ஜூன் 1-ஆம் தேதியே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தத் தேதியில் மாற்றம் எதுவும் இருக்காது என தகவல்கள் தெரிவித்தன. எனவே, பள்ளித் திறக்கும் நாளான ஜூன் 1-ஆம் தேதி சீருடைகள், புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
ஏற்கெனவே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 1 முதல் 9 -ஆம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. முப்பருவ முறையின் கீழ் முதல் பருவத்துக்கான புத்தகங்கள் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அதேபோல, 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு செட் இலவசச் சீருடையும் அன்றைய தினம் வழங்கப்படுகிறது. 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 60 லட்சம் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
பள்ளித் திறக்கும் நாளில் இதை மாணவர்களுக்கு விநியோகிப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று பள்ளி திறக்கும் நாளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள் விநியோகத்தை இவர்கள் உறுதிப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment