Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 10 August 2014

‘பட்டப் படிப்புக்கு பிறகு பிளஸ் 2 முடித்தவரை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காதது சரிதான்’

”பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்த பெண்ணை, ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காமல், நிராகரித்தது சரி தான்,” என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், விளம்பரம் வெளியிட்டது.
மனு தாக்கல் : கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. அதில், கனிமொழி என்பவர், கலந்து கொண்டார். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டார். தேர்வுப் பட்டியலில், இவரது பெயர் இடம் பெறவில்லை. பட்டப் படிப்புக்கு முன், கனிமொழி, பிளஸ் 2 படிக்கவில்லை என்றும் 2009, ஆகஸ்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இல்லாததால், தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் காரணம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு பட்டியலை ரத்து செய்யவும், தன்னை தேர்ந்தெடுத்து, முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கனிமொழி, மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, உயர் நீதிமன்றம், ’கனிமொழி பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனத்துக்கு, பரிசீலிக்க வேண்டும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி இயக்குனர் சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், அரசு வழக்கறிஞர், கார்த்திகேயன், ’அப்பீல்’ மனுத் தாக்கல் செய்தனர்.
அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார், ”பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, 2009ல் பிறப்பித்த உத்தரவுப்படி, பிளஸ் 2 முடித்த பின், பட்டப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே, தகுதி பெறுகின்றனர். ’2009ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும்’ என, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது,” என்றார்.
அரசாணையின் படி மனுவை விசாரித்த, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, ’டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், கனிமொழி, பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார். அதன்பின், பி.எட்., - எம்.ஏ., பட்டங்களை பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து, பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த, 2009ல், பணியாளர்கள் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை பிறப்பித்த அரசாணையின்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிப்பு முடித்த பின் பெறப்படும், பட்டயம், பட்டப் படிப்பு, முதுகலை படிப்பை தான், பணி நியமனத்துக்கு பரிசீலிக்க முடியும். ’இந்த அரசாணை செல்லும்’, என, ’டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க, மனுதாரர்கள் தான், உரிய அதிகாரிகள். அரசாணையில் கூறப்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், பணியிடத்துக்கு பரிசீலிக்க முடியாது.
வித்தியாசம்
இந்த வழக்கைப் பொறுத்தவரை, பட்டப் படிப்பு முடித்த போது, கனிமொழி, பிளஸ் 2 முடித்திருக்கவில்லை. அதனால் தான் பட்டப் படிப்பு, முதுகலை படிப்புக்குப் பின், பிளஸ் 2 முடித்துள்ளார். இரண்டு ஆண்டு, பிளஸ் 2 படிப்புக்கு செல்லாமல், தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி, வெற்றி பெற்றுள்ளார். ரெகுலர் படிப்புக்கும், தனி தேர்வு எழுதுபவர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
மாணவர்களுக்கு கல்வி புகட்ட, கல்வித் தரம் பேணப்பட வேண்டும் என்பது தான், மனுதாரர்களின் தலையாய கடமை. எனவே, கனிமொழியை நிராகரித்தது, தன்னிச்சையான முடிவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, ’டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

No comments: