Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 14 July 2014

கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு

மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.

இதற்கான விவரங்கள் www.ugc.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்துள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கான "ஆராய்ச்சி விருதுக்கு' விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களுடைய துறையில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, ஆராய்ச்சியில் முழுக் கவனம் செலுத்தும் வகையில் அவர்கள் பணிபுரியும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்துக்கு முழு ஊதியத்தை யுஜிசி வழங்கிவிடும்.
மேலும், ஆராய்ச்சி உதவித் தொகையாக சமூக அறிவியல் துறை என்றால் ரூ.2 லட்சமும், பிற துறைகளில் என்றால் ரூ.3 லட்சமும் யுஜிசி வழங்கும். இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசித் தேதியாகும்.
இதுபோல் முதுநிலை ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசித் தேதியாகும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் ஆராய்ச்சிப் படிப்பை (பிஹெச்.டி.) முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் உதவித் தொகையும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். அனுபவமிக்க ஆராய்ச்சியாளருக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
பிஎச்.டி., எம்.ஃபில். மேற்கொள்பவர்களுக்கான மவுலானா ஆஸாத் தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசித் தேதி.
இதுபோல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான ராஜீவ்காந்தி தேசிய கல்வி உதவித் தொகை திட்ட அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25 கடைசித் தேதியாகும்.
இந்தத் திட்டங்களின் கீழ் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.16 ஆயிரம் வீதமும், அதன் பிறகு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் வீதமும் உதவித் தொகை வழங்கப்படும்.

No comments: