Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 10 July 2014

"ஆற்றல்சார் பல்கலைக்கழக திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்'

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஆற்றல்சார் பல்கலைக்கழகத் திட்டத்தில் (யுபிஇ) இடம்பெற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழகத்துக்கு அதிகபட்சம் ரூ.60 கோடி வரை மேம்பாட்டு நிதியை யுஜிசி வழங்கும்.
இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களை உலகத் தரத்திலான பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தும் நோக்கத்தோடு "ஆற்றல்சார் பல்கலைக்கழக திட்டத்தை' யுஜிசி அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் முறையில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் தரம் மற்றும், உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக நிதியுதவி அளித்து உலகத் தரத்திலான பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக, இவ்வாறு தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழகத்துக்கு அதிகபட்சமாக ரூ.50 கோடி வரை மேம்பாட்டு நிதி ஐந்தாண்டு காலத்துக்கு வழங்கப்பட்டது.
முதன் முதலாக 9-ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் சென்னை பல்கலைக்கழகம் உள்பட 5 பல்கலைக்கழகங்கள், 10-ஆவது திட்டக் காலத்தில் 4 பல்கலைக்கழகங்கள், 11-ஆவது திட்டக் காலத்தில் 6 பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 15 பல்கலைக்கழகங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்று பயனடைந்து வருகின்றன.
இப்போது 12-ஆவது திட்டக் காலத்தில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை இத் திட்டத்தின் கீழ் இணைக்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழகத்துக்கு இப்போது அதிகபட்சம் ரூ.60 கோடி வரை மேம்பாட்டு நிதியை யுஜிசி வழங்க உள்ளது.
மேலும், தொடர்ந்து தலைசிறந்த பல்கலைக்கழகமாக விளங்கும் பல்கலைக்கழகத்துக்கு அதிகபட்சம் ரூ.100 கோடி வரை மேம்பாட்டு நிதி வழங்கப்படும்.
இதற்காக அரசு மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம் என யுஜிசி அறிவித்துள்ளது.
தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) "ஏ' அங்கீகாரம் மற்றும் உயர்ந்த ஆராய்ச்சித் திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பல்கலைக்கழகங்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடவை என யுஜிசி அறிவித்துள்ளது.

No comments: