கல்விச் செலவுகள் உயர்ந்து விட்ட இந்நாட்களில் ஏழை, நடுத்தர மாணவர்களின் குடும்பங்கள் செலவுகளை சமாளிக்க சிரமப்பட வேண்டியுள்ளது. இத்தகையோருக்கு உதவும் வகையில் சமூக நலன் கருதி பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை வேப்பேரியில் இயங்கி வரும் ராஜஸ்தான் யூத் அசோசியேஷன், பல்வேறு கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கான புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக தருகிறது. எல்லாத் தரப்பினரும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் லாப நோக்கமின்றி இச்சேவையை தருவதாக கூறுகிறது இந்த அமைப்பு.
உயர் கல்விச் செலவுகளில் பாடப்புத்தகங்களுக்கும் கணிசமான பங்கு உள்ளது. இந்நிலையில் புத்தகச் செலவுகளை சமாளிக்க தங்களின் சேவை பலனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் இந்த அமைப்பினர்.
சேவை மனப்பான்மை கொண்டோர் தரும் நன்கொடையே தங்கள் தரும் சேவைக்கான நிதியாதாரம் என்கிறது ராஜஸ்தான் இளைஞர் சங்கம். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் புத்தகங்கள் வாங்கப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர். தங்களிடம் புத்தகம் பெற்றுப் பலனடைந்த மாணவர்களில் பலர் பல்வேறு உயர் பதவிகளை அடைந்திருப்பதாகவும் இவர்கள் தற்போது தரும் நன்கொடைகளும் தங்கள் சேவைக்கு உறுதுணையாக இருப்பதாகவும் இந்த அமைப்பினர் கூறுகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளாக தந்து வரும் இலவச புத்தகச் சேவை மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பலன் பெற்றிருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது. தற்போது ஆண்டுக்கு 3 ஆயிரம் மாணவர்கள் தங்கள் சேவையை பெறுவதாகவும் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இது தவிர வேலைவாய்ப்பு சேவையை தொடங்கவும் திட்டமிட்டிருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment