Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 21 April 2014

லேப்-டாப் வினியோகத்தில் தொடரும் தாமதம்; நடப்பு கல்வியாண்டில் யாருக்கும் இல்லை

மாநிலம் முழுவதும் 2013-14ம் ஆண்டிற்கான இலவச லேப்-டாப் மாணவர்களுக்கு இதுவரை வினியோகிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் இறுதித் தேர்வுகள் முடிந்த பிறகே லேப்-டாப் மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு நலத்திட்டத்தின் கீழ் சீருடை, புத்தகம், நோட், வண்ண பென்சில், காலணிகள், சைக்கிள், லேப்-டாப் உட்பட பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்ட பொருட்களை வினியோகித்து வருகிறது. இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியாக ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நோக்கில் இலவச லேப்-டாப் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

லேப்-டாப் வினியோகத்திற்காக கடந்த 2011-12, 2012-13ம் ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு 1637.78 கோடி ரூபாயும், நடப்பு கல்வியாண்டில் (2013-14), 925.01 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5.50 லட்சம் மாணவர்கள் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டுக்கான லேப்-டாப் வினியோகம் இதுவரை துவங்கவில்லை; மாவட்டங்களுக்கு அனுப்பப்படவில்லை.
படிக்கும்போது மாணவர்களுக்கு லேப்-டாப் வினியோகிக்கும் பட்சத்தில் மாணவர்கள் அடிப்படை தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக்கொண்டு உயர்கல்விக்கு செல்ல இயலும். ஆனால், பிளஸ் 2 முடித்து சென்ற பின் மாணவர்களை தேடித்தேடி கொடுக்கும் அவலநிலையில் தலைமையாசிரியர்கள் உள்ளனர். ஒரு சில மாணவர்கள், வேறு மாநிலங்களுக்கு உயர்கல்விக்காக சென்றுவிடுவதால் கடைசி வரை லேப்-டாப் வாங்க முடியாமல் போகும் சூழல் ஏற்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2012-13ம் கல்வியாண்டிற்கான லேப்-டாப் 19 ஆயிரத்து 400 மாணவர்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான லேப்-டாப் ஒரு மாணவர்களுக்கும் வினியோகிக்கப்படவில்லை. இதே நிலை அனைத்து மாவட்டங்களிலும் தொடர்கிறது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் வரும் கல்வியாண்டில் வழங்கவேண்டும். அதன் பின், தொடர்ந்து பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கி வந்தால், பிளஸ் 2 படிக்கும் ஓராண்டு காலம் அடிப்படை தொழில்நுட்ப திறனை பள்ளிகளிலேயே மேம்படுத்த இயலும். மேலும், பள்ளியை முடித்து செல்லும் மாணவர்களை தேடும் தலைவலி, தலைமையாசிரியர்களுக்கு இருக்காது," என்றார்.

No comments: