Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 25 April 2014

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கோரி மனு : அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் "நோட்டீஸ்'


அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
புரட்சிகர மாணவர், இளைஞர் அமைப்பின், சென்னை செயலர், கார்த்திகேயன், தாக்கல் செய்த மனு: சென்னையில், 313, மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இங்கு, 1.17 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு, 2012, டிசம்பரில், அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
அதில், "அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில், கட்டடங்கள், குடிநீர், கழிப்பறை, மின்சாரம், இருக்கை, முதல் உதவி, வாகன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையை, சரிவர அமல்படுத்தவில்லை. சென்னையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லை. இருக்கிற வசதிகளும், தரமாக இல்லை.
சென்னையில், 10 மண்டலங்களில் உள்ள, 57, மாநகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தோம். பெரும்பாலான பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து, மாநகராட்சிக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில், அடிப்படை வசதிகளை அளிப்பது தொடர்பான, அரசாணையை அமல்படுத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த அரசாணையை அமல்படுத்துவதை கண்காணிக்க, ஒரு குழுவை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், "நோட்டீஸ்' அனுப்ப, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

No comments: