தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டுக்கான பி.இ., பி.டெக்., இடங்களின் பட்டியலை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு
தமிழகத்தில் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அடங்கும். தனியார் சிறுபான்மையினர் கல்லூரி களில் 50 சதவீத இடங்களும், சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகளில் 65 சதவீத இடங்களும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படும்.
ஆண்டுதோறும் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந் தாய்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின் றன. பிளஸ்-2 தேர்வு முடிவு மே 9-ம் தேதி வெளியிடப்படும் நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்காக 2.5 லட்சம் விண்ணப்பப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் பட்டியல்
இதற்கிடையே, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு வரும் இடங்களின் எண்ணிக்கையை பாடப்பிரிவு வாரியாக கணக்கிடும் பணியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஈடுபட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்யப்படும் பி.இ., பி.டெக். இடங்கள், கடந்த ஆண்டு நிரப்பப்படாத இடங்கள் குறித்த பட்டியலை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனுப்புமாறு அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் குமார் ஜெயந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லேட்ரல் என்ட்ரி முறை
பொறியியல் படிப்பைப் பொருத்தவரையில், 20 சதவீத இடங்கள் “லேட்ரல் என்ட்ரி” என்ற நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் திட்டத்துக்கு ஒதுக்கப்படும். பாலிடெக்னிக்கில் பொறியியல் டிப்ளமா முடித்தவர்கள் இவ்வாறு நேரடியாக பி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டில் சேருவார்கள். லேட்ரல் என்ட்ரி திட்டத்தின் கீழ் அரசுக்கு சரண்டர் செய்யப்படும் இடங்களின் பட்டியலையும் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுப்புமாறும் தனியார் சுயநிதி கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment