சென்னை ராயப்பேட்டையில் புத்தகக் காட்சி ஏப்ரல் 18 முதல் 27 வரை நடைபெறவுள்ளது. ஏப்ரல் 16 -உலக புத்தக நாளையொட்டி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவுடன் இணைந்து ‘சென்னை புத்தகச் சங்கமம்’ என்னும் புத்தகக் காட்சி ஏப்ரல் 18 வெள்ளிக் கிழமை மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது.
தொடக்க நாளன்று மணிமாறன் - மகிழினி வழங்கும் புத்தர் கலைக்குழுவின் பறையிசை நடைபெறும். வரியியல் வல்லுநரும் தமிழக மூதறிஞர் குழுவின் துணைத் தலைவருமான ச. இராசரத்தினம் தலைமையேற்கிறார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பொதுக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றுகிறார்.
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவின் இயக்குநர் எம்.ஏ. சிக்கந்தர் தொடங்கி வைக்கிறார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் ‘எதைப் படிப்பது?’ என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார். சென்னை புத்தகச் சங்கம ஒருங்கிணைப் புக்குழு உறுப்பினர் பெரிகாம் பதிப்பகம் க.ஜெயகிருஷ்ணன் நன்றியுரையாற்றுகிறார்.
நாள்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். இந்தப் புத்தகக் காட்சியில் 100 தமிழ் நிறுவனங்களும், 35 ஆங்கில நிறுவனங்களும், 10 மல்டி மீடியா நிறுவனங்களும் என மொத்தம் 200 நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன. பொது மக்களுக்கு முதலுதவி சிகிச்சை உள்பட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment