Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 19 April 2014

10ம் வகுப்பு: விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் ஏப்.19ம் தேதியோடு நிறைவடைகிறது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ 80 லட்சம் விடைத்தாள்களை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர். பெரும்பாலான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு விட்டதாகவும், ஓரிரு மையங்களில் திங்கள்கிழமை இந்தப் பணிகள் நிறைவடையும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் கூடுதலாக இந்த ஆண்டு ஈடுபடுத்தப்பட்டனர்.

பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் பள்ளிகளின் மூலமாக 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களும் தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர்.
பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏற்கெனவே மதிப்பீடு செய்யப்பட்டு இப்போது மதிப்பெண் விவரங்கள் சி.டி.க்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்கள் இப்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 23-ஆம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: