உலகில் ஏற்படும் வானிலை, பருவ காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் யார் தெரியுமா? ஆசியாதான். ஆசியாவில் எக்குத்தப்பாக எகிறும் காற்று மாசுபாடு காரணமாக உலகம் இந்தக் கதிக்கு ஆளாகியிருப்பதாக விஞ்ஞானிகளின் புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும், டெக்சாஸ் மாகாணத்தின் ஏ அண்டு எம் பல்கலைக்கழகமும் கடந்த 30 ஆண்டுகளாகக் காலநிலை, வானிலை தொடர்பான தகவல் களைத் திரட்டி வந்தன. திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து, உலகில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்துக்குக் காற்று மாசுபாடும் முக்கியக் காரணம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
குறிப்பாகக் காற்று மாசுபாட்டுக்கு சீனாவே முக்கியக் காரணம் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது அந்த ஆய்வறிக்கை. அதற்குக் காரணமாக அங்குப் பெருகி யிருக்கும் தொழிற்சாலைகள் குறிப்பிடப்படுகின்றன.
வளிமண்டலத்தின் மேற்பகுதியில் அடிக்கடி உருவாகும் சக்திவாய்ந்த புயல்களுக்கும் இந்தக் காற்று மாசுபாடுதான் காரணம் என்று ஆய்வறிக்கையில் புகார்கள் நீள்கின்றன. சரி, இதற்கு ஆசியாவும், குறிப்பாகச் சீனாவும் எப்படிக் காரணமாகும்? ‘‘கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி காரணமாகத் தொழிற்சாலைகள் அதிக அளவில் கட்டப்பட்டிருக்கின்றன.
உற்பத்தி நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அளவுக்கு அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் மூலம் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடே காற்று மாசுக்கு முக்கியக் காரணம். நிலக்கரி அதிகமாக எரிக்கப்படுவதும், கார்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையும் சீனா, ஆசிய நாடுகளில் அதிகம். குறிப்பாகச் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசுபாடு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட நூறு மடங்கு அதிகம்’’ என்று ஆய்வறிக்கை விவரிக்கிறது.
எதிர்காலத்தில் இன்னும் சில ஆய்வுகள் செய்யவும், ஆசியாவில் ஏற்படும் காற்று மாசுபாடு உலகக் காலநிலையை எப்படி மாற்றுகிறது என்பதைக் கண்காணிக்கவும் விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். ஆனால், உலகம் மோசமாக மாசுபடவும், புவி வெப்பமடைய முக்கியக் காரணமாகவும் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இது என்பதையும் சேர்த்தே இந்த ஆய்வைப் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஏனென்றால், புவி வெப்பமடைதலைத் தடுக்கக் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்று சர்வதேச மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவை அமெரிக்கா ஏற்க மறுத்துவருகிறது. ஆசியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது உண்மையாக இருக்கும் அதேநேரம், உலகில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அதற்கும் முடிச்சு போடுவது, அமெரிக்காவின் திசைதிருப்பும் முயற்சிகளில் ஒன்றாக இருக்கலாம்.
No comments:
Post a Comment