கல்வித் தகுதியின் அடிப்படையில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு படித்த வேலைவாய்ப்பற்றோர் இளைஞர் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு படித்த வேலைவாய்ப்பற்றோர் இளைஞர் சங்கத்தின் உயர் மட்டக் குழு உறுப்பினர் ஜி.மரியஜோசப் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் புரட்சி வேந்தன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இதில், கல்வித் தகுதியின் அடிப்படையில் வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலையில்லா காலங்களில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை அரசு வழங்க வேண்டும். சுயதொழில் தொடங்குவதற்கு அரசே நேரடியாக வட்டியில்லாத கடன் ரூ.5 லட்சமும், இடமும் அளிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவு, தற்கொலை எண்ணங்கள் ஆகியவைகளை தடுக்க வழிவகை செய்வதற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் மனநல வல்லுநர்கள் மூலம் ஆலோசனை வழங்கவும், தூய்மையான ஊழலற்ற நிர்வாகத்தை அரசு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இச்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு வட்டார பகுதிகளில் இருந்து பட்டதாரிகள் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னையா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.