பாலிடெக்னிக் கல்லூரிகள், கல்லூரி ஆரம்பித்தது முதல் இன்று வரையுள்ள பாடத்திட்டங்கள் அனைத்தையும் பராமரித்து வைத்திருக்கவேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இயக்குநரகம் அனுப்பியுள்ள கடித விவரம்:
பட்டயப் படிப்பை முடித்து வெளிநாடுகளுக்கு பணிக்குச் செல்லும் அல்லது உயர் கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் பட்டயப் படிப்பின் பாடத் திட்ட நகல்களைப் பெறவேண்டிய நிலை ஏற்படுகிறது.
அவ்வாறு பாடத் திட்ட நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரையும் கிண்டியிலுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு கல்லூரிகள் திருப்பி விடுகின்றனர். இதனால், மாணவர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே, கல்லூரிகள் ஆரம்பித்தது முதல் இன்று வரையுள்ள பாடத்திட்டங்கள் அனைத்தையும் அந்தந்த கல்லூரிகளே பராமரிக்க வேண்டியது அவசியம். மேலும், நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளே முதல்வரின் சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும்.
இதற்காக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு மாணவர்கள் அனுப்பிவிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.