Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 8 February 2014

"NAAC' அங்கீகாரம் இல்லாத முன்னணி தமிழக பல்கலைக்கழகங்கள்: பட்டியல் வெளியீடு

தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம் (நாக்) அங்கீகாரம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 651 அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 179 பல்கலைக்கழகங்கள் மட்டுமே "நாக்' அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து, தங்களை தர நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த 179 பல்கலைக்கழகங்களில், இப்போது வெறும் 102 பல்கலைக்கழகங்கள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன. மீதமுள்ள 77 பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் காலாவதியாகிவிட்டன.
தமிழகத்தைப் பொருத்தவரை தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் தாய் பல்கலைக்கழகமாக கருதப்படும் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்பட 12 பல்கûலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் காலாவதியாவிட்டன.
இதில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ஆகியவை "நாக்' அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளன.
ஆனால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அங்கீகாரம் கடந்த 2012 மார்ச் மாதமே காலாவதியாகிவிட்ட நிலையில், மீண்டும் அங்கீகாரம் பெற இவை இன்னும் விண்ணப்பிக்கவே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
நாக் அங்கீகாரம் எதற்கு? நாட்டில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக யுஜிசி சார்பில் கடந்த 1994-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் "நாக்'.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த கவுன்சில், தன்னிடம் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அங்கீகாரம் அளிப்பதோடு, தர நிலையையும் அளித்து வருகிறது.
பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன், மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள், பல்கலைக்கழக நிர்வாகம் என பல்வேறு நிலைகளில் இந்த கவுன்சில் ஆய்வு மேற்கொண்டு அங்கீகாரத்தையும் தர நிலையையும் அளிக்கிறது.
இந்த தர நிலைக்கேற்ப, பல்கலைக்கழகத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான யுஜிசி நிதி கூடுதலாகக் கிடைக்கும் என்பதோடு, பொதுமக்களும் மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் தரத்தை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.