தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட உயிரியல் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பி.எஸ்சி. உயிரியல், தாவரவியல், விலங்கியல் படிப்பவர்கள் திட்டமிட்டு மேற்படிப்பு படித்தால் சிறப்பான வேலைவாய்ப்புகளைப் பெறலாம். பி.எஸ்சி. மைக்ரோ பயாலஜி, பாட்டனி, ஜுவாலஜி, லைஃப் சயின்ஸ் படிப்பவர்கள் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளை படிக்கலாம்.
எம்.எஸ்சி. பயோ மெடிக்கல் ஜெனிடிக்ஸ், மாலிகுலர் பயாலஜி, மெடிக்கல் மைக்ரோ பயாலஜி, டாக்சிகாலஜி பட்டமேற்படிப்புகளில் ஆராய்ச்சி வரை படிக்கலாம். இதில் எம்.எஸ்சி. மெடிக்கல் மைக்ரோ பயாலஜி மட்டும் மூன்றாண்டு படிப்பு.
இப்படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளன. நுழைவுத் தேர்வு எழுதி, வெற்றி பெற்றால் இவற்றில் சேரலாம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. பயோ கெமிக்கல் டெக்னாலஜி, எம்.எஸ்சி. ஜினோமிக்ஸ் படிப்புகள் உள்ளன.
ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்சி. மைக்ரோ பயாலஜி டெக்னாலஜி, பயோ ஹியூமன் ஜெனிடிக்ஸ், அட்வான்ஸ் லேப் டெக்னாலஜி, நியூரோ சயின்ஸ் உள்ளிட்டவை உள்ளன. மருத்துவத் துறை சார்ந்த பணிகளுக்குச் செல்ல விரும்புவோர் இவற்றைத் தேர்வு செய்யலாம்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் மரைன் பயலாஜி படிப்பு உள்ளது. இது கடல்சார் உயிரினங்கள் குறித்த படிப்பு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளது. இயற்கைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சூழலியல் உலகளவில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இப்படிப்பு மூலம் சுற்றுச்சூழல் துறைகளில் பணிக்கு செல்லலாம். மயிலாடுதுறை
ஏ.வி.சி. கல்லூரியில் எம்.எஸ்சி. வைல்ட் லைஃப் பயாலஜி, டோராடூனில் மத்திய அரசின் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தில் எம்.எஸ்சி. வைல்ட் லைஃப் சயின்ஸ் படிப்பு உள்ளன. இவற்றை படிப்பதன் மூலம் வனத் துறை பணிகளுக்குச் செல்லலாம்.
மருத்துவமனை நிர்வாகம் என்பது வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக விளங்குகிறது. இத்துறைக்கு வளமான எதிர்காலமும் உள்ளது. மருத்துவமனையை நிர்வாகம் செய்ய எம்.பி.ஏ. ஹாஸ்பிட்டல் அண்ட் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் படிக்கலாம். எம்.எஸ்சி.
கிளினிக்கல் ரிசர்ச் படிப்பு ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் உள்ளது. பயாலஜி, ஐ.டி. துறை சார்ந்த பணிக்குச் செல்ல விரும்புவோர் எம்.எஸ்சி. பயோ-இன்ஃபர்மேடிக்ஸ் படிக்கலாம்.
உயிரியல் துறையைப் பொருத்தவரை, எந்த அளவுக்கு உயர்கல்வி கற்கிறோமோ, அதற்கேற்ப உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும். பட்டப் படிப்பு முடித்ததும் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பதைவிட மேலும் படித்து ஆராய்ச்சி படிப்பு வரை முடிப்பவர்களுக்கு வரவேற்பு அதிகம்.
No comments:
Post a Comment