வரும் நிதியாண்டில் 1,100 கோடி ரூபாய் செலவில் பிளஸ் 2 மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 5.5 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2014-15 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு:
மாநிலத்தில் உள்ள பள்ளிக் குழந்தைதைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி அளித்திட, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு 17,731.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மாநில அரசின் பங்காக, 2014-2015 ஆண் ஆண்டில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு, மாநில அரசின் பங்காக, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 384.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் மாநில அரசின் நிதி மூலமாக நிறைவு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துள்ளது. இதற்காக, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பின்வரும் திட்டங்களுக்காக இந்த அரசு மொத்தமாக 1,631.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
* 111.29 லட்சம் மாணவ மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்குவதற்காக 264.35 கோடி ரூபாய்.
* 77.66 லட்சம் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக 106.45 கோடி ரூபாய்.
* 20.57 லட்சம் மாணவ மாணவியருக்கு லவசப் பேருந்து பயணச் சலுகை வழங்குவதற்காக 323 கோடி ரூபாய்.
* 46.29 லட்சம் மாணவ மாணவியருக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக 409.30 கோடி ரூபாய்.
* 90.78 லட்சம் மாணவ மாணவியருக்கு பள்ளிப் புத்தகப் பைகள் வழங்குவதற்காக 120.71 கோடி ரூபாய்.
* 77.66 லட்சம் மாணவ மாணவியருக்கு காலணிகள் வழங்குவதற்காக 120.07 கோடி ரூபாய்.
* 9.39 லட்சம் மாணவ மாணவியருக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்குவதற்காக 6.77 கோடி ரூபாய்.
* 31.45 லட்சம் மாணவ மாணவியருக்கு கலர் பென்சில்கள், கிரேயான்கள் வழங்குவதற்காக 6.49 கோடி ரூபாய்.
* 6.30 லட்சம் மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக 216.04 கோடி ரூபாய்.
* மலைப் பகுதிகளில் படிக்கும் 1.03 லட்சம் மாணவ மாணவியருக்கு கம்பளி ஆடைகள் வழங்க 3.71 கோடி ரூபாய்.
* 36.07 லட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ரூபாய்.
மடிக்கணினி...
இந்த அரசின் முதல் மூன்று ஆண்டுகளில், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 22.33 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், தேசிய அளவில் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளதோடு, மற்ற பல மாநிலங்கள் பின்பற்றத்தக்க முன்னோடியாக நமது மாநிலத்தை முன்னிறுத்தி உள்ளது.
வரும் நிதியாண்டிலும் 1,100 கோடி ரூபாய் செலவில் +2 மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 5.5 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
உயர் கல்வி:
2014-2015 ஆண்டில், உயர் கல்வித் துறைக்கு 3,627.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. '
முதல் தலைமுறைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்கும் திட்டத்துக்காக 585.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment