அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் உள்ள குளறுபடிகளைக் களைய ஆசிரியர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர். இதுகுறித்து மதுரையில் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.என்.பெருமாள், மன்னர் திருமலை நாயக்கர் சுயநிதிக் கல்லூரி பேராசிரியர் ஆர்.அற்புதராஜ் மற்றும் மதுரைக் கல்லூரி சுயநிதிப் பிரிவு பேராசிரியர் ஒய்.நடராஜன், யாதவர் கல்லூரி சுயநிதிப் பிரிவு பேராசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் சனிக்கிழமை கூறியதாவது:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) தகுதியும், பணி மூப்பு காலமும் முக்கிய தகுதியாக உள்ளது. ஆனால், பல ஆண்டுகள் பணிபுரிந்தாலும், தேசிய, மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சான்று உள்ள ஆண்டுகளில் இருந்தே பணிக் கால அனுபவம் கருத்தில் கொள்ளப்படும் என தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கூறுவது சரியல்ல.
அனுபவத்துக்கு ஆண்டுக்கு தலா 2 மதிப்பெண்கள் என தேர்வு வாரியம் கூறுகிறது. அதன்படி, தேசிய, மாநிலத் தகுதித் தேர்வுக்கு முன்பே பலரும் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். மேலும், எம்.பில், பிஎச்.டி. என ஆய்விலும் ஈடுபட்டவர்களும் தாமதமாகவே தகுதித் தேர்வில் பஙகேற்றுள்ளனர். ஆகவே, தகுதித் தேர்வு ஆண்டிலிருந்துதான் பணிக் காலம் கணக்கிடப்படும் என்பது எந்த விதத்திலும் சரியல்ல.
மேலும், உதவிப் பேராசிரியர் தகுதிக்கு தேசிய, மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை. எம்.பில்., பிஎச்.டி. பட்டமே போதும் என்றும் முந்தைய உதவிப் பேராசிரியர் நியமனத்தின்போது கல்வித் துறை கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, ஆசிரியர் தேர்வு வாரியம் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தெளிவான நடைமுறையைப் பின்பற்றாவிடில், சட்ட ரீதியாகச் செல்ல நேரிடும். தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் தகுதியுள்ள உதவிப் பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விதிப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment