Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 19 November 2013

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் சம்பளத்துடன் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு  காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது.  பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் அரசு அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினால் உடனடியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவை சந்தித்து அகவிலைப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று நவம்பர் மாத சம்பளத்துடன் 10% அகவிலைப்படி சேர்த்து வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் நிதிநெருக்கடி காரணமாக முன்பு இருந்த நிர்வாகத்தினரால் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர்களுக்கு கடந்த 2012 ஆகஸ்டு மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட ET விடுப்பு சரண்டர் தொகை தீபாவளிக்கு முன்னதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இடி விடுப்பு சரண்டர் தொகையை பெற்றதால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.  இவையல்லாமல் பல்கலைக்கழக கிரடிட் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரு மடங்கு ஈவுத்தொகை (டிவிடென்ட்) ரூ.5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வழங்கப்பட்டதால் அச்சத்தில் இருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments: