Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 14 January 2013

TRB-TNTET பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் விநியோகம் - DINAMANI 14/1/2013


ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
 ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.
 இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
 2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
 தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
 தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு

 அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
 ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?

 ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
 இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
 பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 உதவிப் பேராசிரியர்கள் - 1,063
 சிறப்பாசிரியர்கள் - 841


No comments: