Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 11 January 2013

நேரடி DEO தேர்வுமுறையிலும் அதிரடி மாற்றம் டி.என்.பி.எஸ்.சி. முடிவு


குரூப்–1 தேர்வை தொடர்ந்து நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வையிடுவது, தேர்வு நடத்துதல் போன்ற பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியில் இருப்பார்.ஆசிரியர்களின் ஊதியம், விடுமுறை, இடமாற்றம், வருங்கால வைப்புநிதி தொடர்பான பணிகளையும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் கவனிக்கிறார்கள். எனவே, பள்ளிக்கல்வித்துறையில் டி.இ.ஓ. பதவி, முக்கிய பதவியாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 69 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு டி.இ.ஓ. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

டி.இ.ஓ. பதவியை பொறுத்தமட்டில், 25 சதவீத காலி இடங்கள் நேரடி போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 75 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.நேரடி டி.இ.ஓ. காலி பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

டி.இ.ஓ. பதவி என்பது அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டடு) நிர்வாக பதவி ஆகும். டி.இ.ஓ.வாக பணியில் சேருவோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.) பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர், இயக்குனர் என்று படிப்படியாக பதவி உயர்வு பெறுகிறார்கள். மேலும், சிறப்பு பதவி உயர்வு மூலமாக வருவாய்த்துறை சாராத பணிப்பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம்.எழுத்துத்தேர்வில் குறிப்பிட்ட பாடத்தில் இருந்து 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 40 மார்க் என்று இருந்தது. இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்திருப்பதை போன்று நேரடி டி.இ.ஓ. தேர்விலும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, டி.இ.ஓ. தேர்வில் வெறுமனே விண்ணப்பதாரர்கள் படித்த பாடங்களில் இருந்து மட்டுமின்றி பொது அறிவு, ஆளுமைத்திறன், உளவியல், நிர்வாகத்திறமை போன்றவற்றை ஆராயும் வகையில் புதிய வினாக்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய தேர்வுமுறையில் பொதுஅறிவு தாளும் விருப்பப் பாட தாள் ஒன்றும் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.மேலும், குரூப்–1 தேர்வை போன்று நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்ணையும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விரைவில் 12 டி.இ.ஓ. காலி பணி இடங்கள் நேரடித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: