Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 7 September 2012

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் விண்ணப்பிக்கலாம்


 அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, செப்டம்பர் 7 முதல், 12ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   தேர்வுத்துறை அறிவிப்பு: ஏற்கனவே தேர்வெழுதி, சில பாடங்களில் தோல்வியுற்ற தேர்வர், "எச்" வகை விண்ணப்பத்தையும்; பத்தாம் வகுப்பு முடித்து, நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுதுபவர், "எச்பி" வகை விண்ணப்பத்தையும், பூர்த்தி செய்ய வேண்டும். www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம், நாளை முதல், 12ம் தேதி மாலை, 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

  தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும், அதில் தரப்பட்டுள்ளன. கட்டணம் செலுத்துவதற்கான, செலானை 12ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட வங்கியில், 13ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில், தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி, இறுதியாக படித்த பள்ளியிலோ அல்லது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமோ, சான்றொப்பம் பெற வேண்டும்.

    வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட, அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீதையும் இணைக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தின் எண்களை, தேர்வர் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு தொடர்பாக, தேர்வுத்துறையிடம் முறையீடு செய்யவோ, இதர பணிகளுக்கோ, அந்த எண், கட்டாயம் தேவை. இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

No comments: