Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 21 January 2015

TNPSC குரூப் 1: அதிகாரிகள் நியமன விவகாரம்: விடைத்தாள்களை யுபிஎஸ்சி திருத்த உத்தரவு

டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வில் 83 பேர் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று அதிகாரிகளாக உள்ள 83 பேரின் விடைத்தாள்களை யுபிஎஸ்சி திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை இரண்டு வாரத்தில் யுபிஎஸ்சிக்கு அளிக்க வேண்டும். யுபிஎஸ்சி திருத்தப்பட்ட விடைத்தாள்களை இரண்டு மாதத்தில் திருத்தி, நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பின்னணி:
2000-2001ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி "குரூப் 1' தேர்வில் தேர்ச்சி பெற்று 2005-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 83 அதிகாரிகளின் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட 83 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை தொடக்கத்தில் உறுதி செய்தது. ஆனால் அதன் பிறகு, பாதிக்கப்பட்ட 83 பேரும், தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி ஆகியவற்றின் சார்பிலும் முறையீடு செய்யப்பட்டதையடுத்து, முன்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர். தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  விசாரணைக்கு வந்ததது. அப்போது, 83 அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த மனுதாரர்களில் ஒருவரான மாதவன் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி முன் வைத்த வாதம்:
"2001-ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான விதிமுறைகள் தெளிவாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன. அதில், நீல நிற மை கொண்ட பேனாவை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து.
ஆனால், தேர்வு எழுதிய பலர் இந்த விதியைப் பின்பற்றாதது பின்னர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 83 பேரின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதற்கான காரணமும் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யும் வகையில் தொடரப்பட்டுள்ள தமிழக அரசும் சம்பந்தப்பட்டவர்களும் தொடர்ந்துள்ள முறையீட்டு வழக்கு தேவையற்றது. எனவே, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி "குரூப் 1 தேர்வு உரிய விதிமுறைகளின்படியே நடைபெற்றது. இந்த விவகாரத்தில்,தேர்வு முறையை மனுதாரர் (மாதவன்) புரிந்து கொள்ளவில்லை' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: "இந்த வழக்கில் 83 பேரின் விடைத்தாள்களை சரி பார்க்க வசதியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (யுபிஎஸ்சி) மனுதாரராகச் சேர்க்க நீதிமன்றம் விரும்புகிறது. '
எனவே, இது பற்றிய யுபிஎஸ்சியின் நிலையை அடுத்த ஆண்டு (2015) ஜனவரிக்குள் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். 2001-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதிய 800 பேரின் விடைத்தாள்களை, அடுத்த விசாரணை நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடுகிறோம்' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

No comments: