தமிழக காவல் துறையில் 1,365 எஸ்.ஐ.-க்கள் உட்பட 14,443 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் 1,450 காவல் நிலையங்கள்; 200 போக்குவரத்து; 190 மகளிர்; 70 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. அதில் 1.22 லட்சம் பணியிடங்கள் உள்ளன. தற்போது ஒரு லட்சத்து 184 பணி இடங்களில் மட்டுமே போலீசார் பணியாற்றுகின்றனர். கூடுதல் டி.ஜி.பி., முதல் காவலர் வரை 20,716 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மக்கள் தொகைக்கு ஏற்ப...
தேசிய அளவில், மக்கள் தொகைக்கு ஏற்ப, 7,000 பேருக்கு, ஒரு போலீஸ்காரர் உள்ளனர். ஆனால், தமிழகத்தில், 600 பேருக்கு, ஒரு போலீஸ்காரர் உள்ளார். தேசிய அளவை காட்டிலும், இது அதிகம் என்றாலும், குற்றங்களின் அடிப்படையில், காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, கடந்த 2011ல், எஸ்.ஐ., தேர்வு நடந்தது. அதன்பின், 2012ல், இரண்டாம் நிலை, சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என, 13,320 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சீருடை பணியாளர் வாரியம்
அதன் பின்னர், போலீஸ் வேலைக்கு ஆள் எடுப்பதற்கான அறிகுறி இல்லை. இந்த நிலையில் 1,091 எஸ்.ஐ.,க்கள், 1,005 தீயணைப்பு படை வீரர்கள், 17,138 போலீசார் உட்பட, 19,234 பேரை தேர்வுசெய்ய, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பியது. அதுபற்றி எந்த பதிலும் வராமல் இருந்தது.
மேலும், பொதுப்பிரிவு இளைஞர்கள், 28 வயதை கடந்து விட்டால், எஸ்.ஐ., பணியில் சேர முடியாது என்ற விதி உள்ளதால், தேர்வு தேதி எப்போது வரும் என்று காத்து கிடந்தனர். அவர்களின் நெஞ்சில் பால் வார்க்கும் வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப, அரசிடம் இருந்து, நல்ல அறிவிப்பு வந்து இருப்பதாக கூறப்படுகிறது.
886 எஸ்.ஐ., தேர்வாகின்றனர்
இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2012 - 13க்கான காலி பணியிடங்கள் குறித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், 13,078 போலீசார், 886 எஸ்.ஐ.,க்கள், 277 தொழில்நுட்ப எஸ்.ஐ.,க்கள், 202 கைரேகை பதிவு ஆய்வாளர்கள் என, மொத்தம் 14,443 இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment