சென்னை பல்கலையின் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, ஆட்சி மன்ற குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
சென்னை பல்கலை யின், ஆட்சி மன்ற குழு (சிண்டிகேட்) கூட்டம், துணைவேந்தர் தாண்ட வன் தலைமையில் நடந்தது. இதில், உயர்கல்வித் துறை செயலர் ஹேமந்த் குமார் சின்கா, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் பிரவீன்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது: சென்னை பல்கலைக்கு, நானோ தொழில்நுட்பவியல், நானோ அறிவியல், உயிர் அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்காக, இரண்டு கட்டமாக ஆசிரியர்களை தேர்வு செய்தனர். அதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன; அதை பற்றி விசாரிக்க வேண்டும் என, உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கமிஷனர் பிரவீன் குமார், தான் பேசியதை அவைக்குறிப்பில் சேர்க்காமல், தான் பேசாத தகவல்களை சேர்த்து, சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி, எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர், கல்வி தகுதி மதிப்பீட்டின் அடிப்படையில், தர நிர்ணய கட்டுப்பாட்டு மையத்தின் ஒப்புதலோடும், தொடர்புடைய குழுக்களின் ஒப்புதலோடும்தான், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என, தெரிவித்தார். உயர்கல்வி துறையின் கூடுதல் தலைமை செயலர், ஹேமந்த் குமார் சின்கா உள்ளிட்டோரும் இதையே வலியுறுத்தினர்.
அதை தொடர்ந்து, வரும் கூட்டங்களில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நியாயமான பதில்களை, தொடர்புடையோர் அளிப்பர் என நம்புகிறோம். மேலும், அவ்வாறு நியாயம் கிடைக்க வேண்டும் எனில், உயர்கல்வி துறை கூடுதல் செயலரும், தொழில்நுட்ப கல்வி கமிஷனரும், தொடர்ந்து கூட்டங்களுக்கு வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment