Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 24 December 2014

பிளஸ் 2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று சரிபார்ப்பு

மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவ, மாணவியரின் திருத்தம் செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் சரிபார்ப்பு (டிச.24) புதன்கிழமை மதுரையில் முதன்மைக் கல்வி அலுவலர் இ.ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலையில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி துவங்கி, மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வெழுதும் பள்ளி மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி ஏற்கெனவே, அந்தந்த பள்ளிகள் மூலம் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு, மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள் தயாரிப்பதற்கான பட்டியல் இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இச்சான்றுகளில் மாணவர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த தேதிகளில் தவறுகள் ஏதும் ஏற்பட்டு விடாமல் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியான பட்டியலை தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில், மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களில் எவ்வித திருத்தமோ, தவறுகளோ இல்லாத வகையில் வழங்கும் முகமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு ஏற்கெனவே முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு, திருத்தம் ஏதும் இருந்தால் வகுப்பறைகளில் மாணவ, மாணவியரிடம் வாசித்து காண்பித்து திருத்தங்களை செய்து இறுதி பட்டியல் தயாரிக்க காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, அனைத்து பள்ளிகளிலும் திருத்தம் செய்யப்பட்ட இறுதிப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல்களை இறுதி செய்வதற்கான அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 24-ம் தேதி  மதுரை ஓசிபிஎம் மகளிர் பள்ளியில் நடக்கிறது. முதன்மைக் கல்வி அலுவலர் இ.ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
அப்போது, தங்களது பள்ளியிலிருந்து பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ,மாணவியரின் திருத்தம் செய்யப்பட்ட இறுதிப்பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கவுள்ளனர். இந்தப் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாணவ, மாணவியரின் பெயர், பிறந்ததேதி தொடர்பான திருத்தங்கள், முதன்மைக் கல்வி அலுவலகத்திலுள்ள கணினியில் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல்கள் இறுதி செய்யப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வித் தேர்வுத்துறைக்கு ஓரிரு நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்தப் பட்டியல்கள் அடிப்படையில், பிளஸ் 2 மாணவ, மாணவியரின் மதிப்பெண் சான்றுகள் தயாரிக்கப்படும், என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments: