தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூன் 14) காலை வெளியிடப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் சேர மொத்தம் 27,907 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) கடந்த ஜூன் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிடுகிறார். சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் சிறப்புப் பிரிவினருக்கு வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கு வரும் 18-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் கவனிக்க...எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தப் பிரிவு மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும். அப்போது தங்களது உடல் உறுப்பு குறைபாட்டுடன் கூடிய முழு அளவு படத்தை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment